பாகிஸ்தானில் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கைபர் பக்துன்க்வாவின் புனேர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இந்து பெண் ஒரு பொதுத் தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தானில் 16-வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் புனேர் மாவட்டத்தில் உள்ள பிகே -25 பொதுத் தொகுதிக்கு சவீரா பர்காஷ் என்ற இந்துப் பெண் தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.
இந்து சமூகத்தைச் சேர்ந்தவரான சவீரா பர்காஷ், சமீபத்தில் ஓய்வு பெற்ற மருத்துவரும், கடந்த 35 ஆண்டுகளாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிர்வாகியுமான தனது தந்தை ஓம் பர்காஷின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) சார்பில் தேர்தலில் போட்டியிடுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியின் 2022 பட்டதாரியான சவீரா பர்காஷ், புனேரில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மகளிர் பிரிவின் பொதுச் செயலாளராக உள்ளார். சமூகத்தின் நலனுக்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய அவர், பெண்களின் மேம்பாட்டிற்காகவும், பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காக வாதிடுவதற்காகவும் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்
புனேரைச் சேர்ந்த சமூக ஊடக செல்வாக்கு மிக்க இம்ரான் நோஷாத் கான், சவீரா பர்காஷிற்கு தனது முழு ஆதரவை வெளிப்படுத்தினார். பாரம்பரிய ஆணாதிக்கத்தால் நிலைநிறுத்தப்பட்ட ஸ்டீரியோடைப்களை உடைத்ததற்காக அவர் அவரைப் பாராட்டியுள்ளார். புனேர் பாகிஸ்தானுடன் இணைந்து 55 ஆண்டுகளான சூழலில் இப்பிராந்தியத்தில் ஒரு பெண் தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய திருத்தங்களின்படி, பொது தொகுதிகளில் ஐந்து சதவீத பெண் வேட்பாளர்கள் இருக்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.