கிறிஸ்துமஸ் நாளில் களையிழந்த பெத்லஹேம்!... காரணம் என்ன?


பெத்லஹேம் நகரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக இயேசு கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் பெத்லஹேம் நகரம் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளான இன்று களையிழந்து காணப்படுகிறது.

கிறிஸ்துமஸ் நாளில் களையிழந்த பெத்லஹேம்.

ஜெருசலேமின் தெற்கில் அமைந்துள்ளது பெத்லஹேம். இயேசு கிறிஸ்து இந்நகரில் தான் பிறந்தார் என கிறிஸ்துவர்களால் நம்பப்படுகிறது. இங்குள்ள 'சர்ச் ஆஃப் நேட்டிவிட்டி' தேவாலயத்தைப் பார்க்க உலகம் முழுவதுமிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள், சுற்றுலாப் பயணிகள் வருவது வாடிக்கை.

குறிப்பாக கிறிஸ்துமஸ் நாளில் பெத்லஹேம் விழா கோலம் பூண்டிருக்கும். இந்நிலையில் கடந்த அக்டோபர் 7-ம் தேதி முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.

மேலும், காஸா நகரம் மீது இஸ்ரேலின் தாக்குதல் அதைத் தொடர்ந்து வெஸ்ட் பேங்கில் அதிகரித்த வன்முறை போன்ற காரணங்களால் பெத்லஹேமிற்கு வெளிநாடுகளிலிருந்து யாரும் வரவில்லை என அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பெத்லஹேமில் பல தலைமுறைகளாக, அலெக்சாண்ட்ரியா என்ற ஹோட்டல் உரிமையாளர் ஜோய் கனாவதி என்பவர் கூறுகையில், “இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் எப்போதும் இல்லாதவாறு மோசமானதாக அமைந்துவிட்டது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமின்றி காணப்படும் பெத்லஹேம்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பெத்லஹேம் மூடப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மரம் இல்லை, மகிழ்ச்சி இல்லை, கிறிஸ்துமஸ் உற்சாகமில்லை" என்றார்.

இயேசு கிறிஸ்து பிறந்ததாக கூறப்படும் பெத்லஹேம் 'சர்ச் ஆஃப் நேட்டிவிட்டி' தேவாலயத்தைப் பார்க்க உலக முழுவதுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் நடக்கும் வணிகத்தை நம்பியே பெத்லஹேம் பொருளாதாரம் உள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக, இந்த ஆண்டு பெத்லஹேம் வெறிச்சோடிக் கிடப்பதால் இங்குள்ள விடுதிகள், உணவகங்கள் மற்றும் பரிசுபொருள் விற்பனை கடைகள் மூடப்பட்டு நகரம் களையிழந்து காணப்படுகிறது.

x