‘இன்னைக்கு ஹேப்பியா இல்லையா... லீவு எடுத்துக்கோங்க’ சீன நிறுவனத்தின் யோசனைக்கு பெரும் வரவேற்பு


மகிழ்ச்சியற்ற பணியாளார்கள் - யூ டோங்லாய்

’இன்றைய தினம் மகிழ்ச்சியாக இல்லாத ஊழியர்கள் தயவு செய்து விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சீன நிறுவனம் ஒன்று அறிவுறுத்துகிறது. இதற்காக ’மகிழ்ச்சியற்ற விடுப்பு’ என்ற பெயரில் சிறப்பு விடுப்புகளையும் அந்த நிறுவனம் தொடங்கியிருப்பது வரவேற்பு பெற்றுள்ளது.

மகிழ்வாகவும் இறுக்கமற்றும் இருக்கும்போது மட்டுமே ஊழியர்கள் தங்களது முழுத்திறனையும் வெளிப்படுத்தம் முடியும் என்பதில் புத்திசாலித்தனமான நிறுவனங்கள் போதிய அக்கறை காட்டுகின்றன. இதற்காக தங்கள் பணியாளர்களுக்கான பணிச்சூழலை இறுக்கமற்றதாகவும், இலகுவானதாகவும் அவை உருவாக்கி வருகின்றன.

யூ டோங்லாய்

இவற்றோடு, ஊழியர்கள் அன்றைய தினம் மகிழ்ச்சியாக இல்லாத பட்சத்தில் பணிக்கு வரவேண்டாம் என்றும், அதற்கென இருக்கும் சிறப்பு விடுப்புகளை எடுத்துக்கொள்ளவும் முன்னோடி சீன நிறுவனங்கள் அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. வேலை - வாழ்க்கை சம நிலையை சரியானபடி பராமரிக்கவும் இந்த சிறப்பு விடுப்புகள் உதவும் என நிறுவனங்கள் நம்புகின்றன.

Pang Dong Lai என்ற சீன முன்னணி நிறுவனம் இதற்காக ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பு விடுமுறைக்கு அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இந்த விடுமுறையை நிர்வாகத்தால் மறுக்கவும் முடியாது என நிபந்தனை வைத்துள்ளது. நிறுவனத்தின் தலைவரான Yu Donglai என்பவர் ’அனைவருக்கும் மகிழ்ச்சியற்ற தினங்கள் வாழ்க்கையில் உண்டு. எனவே ஒருவர் மகிழ்ச்சியாக இல்லாதபோது அவரை பணிக்கு வர வற்புறுத்துவது தவறு. அன்றைய தினத்தை விடுப்பாக அனுமதிப்பதன் மூலம் தனது மகிழ்ச்சியை அவரால் மீட்டெடுக்க முடியும்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

நிறுவனத்தின் வேலைவாய்ப்புக் கொள்கையின்படி, பணியாளர்கள் ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். வார இறுதி விடுமுறை மற்றும் 30 முதல் 40 நாட்கள் வருடாந்திர விடுப்பு மற்றும் சந்திர புத்தாண்டின் போது 5 நாட்கள் விடுமுறைக்கு உரிமை உண்டு. “நாங்கள் பெரியண்ணனாக இருக்க விரும்பவில்லை. எங்கள் ஊழியர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் நிம்மதியான வாழ்க்கை இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்களின் மூலம் நிறுவனமும் அப்படியே உயரும் என்பதையும் நம்புகிறோம்” என்றும் அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பணியிட அழுத்தம்

சீன நிறுவனத்தின் முன்னோடி ஏற்பாடுக்கு சீனாவுக்கு அப்பாலும் வரவேற்பு அதிகரித்துள்ளது. உண்மையில் ஏனைய நாடுகளைவிட சீனாவில் பணியாளர்களுக்கான பணியிட அழுத்தங்கள் அதிகம். 2021-ம் ஆண்டின் ’பணியிட கவலை குறித்த கணக்கெடுப்பின்படி, 65 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலையில் சோர்வாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும்’ இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதனையடுத்து பல்வேறு சீன நிறுவனங்களும் பணியாளர்களின் உடல் நலம், மன நலம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தன. அவற்றில் ஒன்றாகவே, மகிழ்வான பணியிடம் குறித்தும், மகிழ்ச்சியற்ற விடுப்புக்கான அனுமதியும் நிறுவனங்களின் நடைமுறையில் அமலுக்கு வந்துள்ளன. இந்த மகிழ்ச்சியற்ற விடுப்பு ஏற்பாடு, சீனாவுக்கு அப்பாலும் வரவேற்பு பெற்று வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


இன்றும், நாளையும்.... சென்னை வானிலை மையம் தந்த சர்ப்ரைஸ்!

பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை!

x