ஹெலிகாப்டரில் இறங்கி சரக்கு கப்பலை சிறைபிடித்த ஈரான்... 17 இந்தியர்களின் கதி?


கப்பலுக்குள் இறங்கும் ஈரான் கடற்படை .

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா புறப்பட்ட சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்துள்ளது. அந்த கப்பலில் உள்ள மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் நிலை என்னவானது என்ற கேள்வி எழுந்துள்ளது.

காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணயக்கைதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. எஞ்சிய பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட காசா

இந்த நிலையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 33 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போரில் ஹமாஸ்க்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானின் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது.

சரக்கு கப்பல்

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்திது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது ரிசா சகிதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலச்சந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் இன்று சிறைபிடித்துள்ளது. சரக்கு கப்பல் ஹார்முஸ் ஜலச்சந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அதை ஈரானிய கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் கப்பலுக்குள் ஆயுதங்களுடன் இறங்கிய ஈரானிய கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இந்த கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்டு இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த கப்பலில் உள்ள மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. அந்தக் கப்பலில் பயணித்த இந்தியர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்ய இந்திய அதிகாரிகள், ஈரான் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

x