விண்வெளிக்கு சுற்றுலா பயணியாக பறக்கும் முதல் இந்திய விமானி!


இந்திய விமானி கோபிசந்த் தோட்டகுரா

இந்திய விமானி கோபிசந்த் தோட்டகுரா, சுற்றுலா பயணியாக விண்வெளிக்கு பயணம் செய்யும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனம் 'ப்ளூ ஆரிஜின். இந்நிறுவனம் 'நியூ ஷெப்பர்ட்-25 (என்எஸ்-25) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 6 பேர் கொண்ட ஒரு குழுவை சுற்றுலாப் பயணிகளாக விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த குழுவில் மேசன் ஏஞ்சல், சில்வெய்ன் சிரோன், கென்னத் எல் ஹெஸ், கரோல் ஷாலர், கோபிசந்த் தோடாகுரா, முன்னாள் விமானப்படை கேப்டன் எட் டுவைட் ஆகிய 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்த 30 வயதே ஆகும் கோபிசந்த் தோட்டகுராவும் ஒருவர். இதன் மூலம் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் என்எஸ்-25 திட்டத்தில், சுற்றுலா பயணியாக விண்வெளிக்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை கோபி தோட்டகுரா பெற உள்ளார். இவர்கள் பயணிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபிசந்த் தோட்டகுரா குறித்து 'ப்ளூ ஆரிஜின்' வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புஷ், ஏரோபாட்டிக், கடல் விமானங்கள், கிளைடர்கள், சூடான காற்று பலூன்கள் போன்றவற்றை இயக்கிய அனுபவம் மற்றும் சர்வதேச மருத்துவ ஜெட் விமானியாக கோபிசந்த் பணியாற்றியுள்ளார். வாழ்நாள் முழுவதும் பயணிப்பவர். இவரது மிக சமீபத்திய சாகசம், கிளிமஞ்சாரோ மவுண்ட் சிகரம்.” என பெருமையுடன் தெரிவித்துள்ளது.

கோபிசந்த் தோட்டகுரா

'ப்ளூ ஆரிஜின்' விண்வெளி சுற்றுலா திட்டத்தில் இணைந்துள்ளது தொடர்பாக கோபிசந்த் தோட்டகுரா கூறுகையில், “ப்ளூ ஆர்ஜின், விண்வெளி சுற்றுலாவை வளர்க்கவும், அந்தத் துறையில் நுழையவும் தனியார் சர்வதேச விண்வெளி நிலையத்தை திறக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனம் நாசாவுடன் இணைந்துள்ளது. எதிர்காலத்தில் விண்வெளி சுற்றுலா பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என நம்புகிறேன்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்... ஸ்காலர்ஷிப் விவரங்கள்!

x