அதிர்ச்சி... சுவிட்சர்லாந்தில் கோகைன் போதைப்பொருளுக்கு சட்டப்பூர்வ அனுமதி!


சுவிட்சர்லாந்து தலைநகா் பெர்னில் பொழுதுபோக்கு பயன்பாட்டுக்காக 'கோகைன்' என்ற போதைப் பொருளை சட்டப்பூா்வமாக அனுமதிப்பது குறித்து உலகிலேயே முதல்முறையாக அந்த நாட்டு அரசு பரிசீலனை செய்து வருகிறது.

பெர்ன் நகரில் கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலன் அளிப்பதில்லை. கடுமையான சட்டதிட்டங்களுக்கு இடையிலும் போதைப் பொருள் விற்பனை கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறுகிறது. எனவே, கோகைனை சட்டபூா்வ கேளிக்கைப் பயன்பாட்டுப் பொருளாக அங்கீகரித்தால் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், சந்தையைக் கண்காணிக்கவும் முடியும் என்று நிபுணா்கள் கூறி வருகின்றனா்.

அதையடுத்து, சோதனை முறையில் கோகைனை சட்டபூா்வமாக்குவதற்கு நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும், அதனை செயல்படுத்த பெர்ன் மாநகராட்சி ஒப்புதல் அளிக்க வேண்டும். அத்துடன், அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு வழங்கிய பெர்ன் கவுன்சில் உறுப்பினர் ஈவா சென், "போதைக்கு எதிரான போர் தோல்வியடைந்துள்ளது, எனவே நாம் புதிய யோசனைகளை பரிசோதித்து பார்க்க வேண்டும். இதனை சட்டப்பூர்வமாக்கினால் கண்காணிக்க முடியும். இது வெறும் அடக்குமுறையை விட சிறப்பாக வேலை செய்யும்” என்றார்

"எங்களிடம் இப்போது சுவிட்சர்லாந்தில் நிறைய கோகைன் உள்ளது. மலிவான விலையில் மற்றும் நாங்கள் இதுவரை கண்டிராத மிக உயர்ந்த தரத்தில் கிடைக்கிறது. இங்கு ஒரு பீர் விலைக்கே கோகைன் கிடைக்கிறது" என்று போதை அடிமை தடுப்பு பிரிவின் சுவிட்சர்லாந்தின் துணை இயக்குனர் ஃபிராங்க் ஜோபல் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அமெரிக்க மாநிலமான ஓரிகான், மருத்துவ சிகிச்சைக்காக சிறிய அளவிலான கோகைன் வைத்திருப்பதை சட்டப்பூர்வமாக்கியது. ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்ச்சுகல் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் கோகைன் உள்ளிட்ட போதைப்பொருளை வைத்திருந்தால் சிறைத்தண்டனை இல்லை.

x