பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் இன்று காலை நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 3 வது முறையாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய புவியியல் ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், பாகிஸ்தானில் இன்று காலை 5.30 மணியளவில் ரிக்டர் அளவில் 4.4 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ராவல்பிண்டியை மையமாகக் கொண்டு 16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியிடவில்லை.
முன்னதாக பாகிஸ்தானில் கடந்த 18ம் தேதி ராஜன்பூர் நகரில் காலை 11:38 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் கடந்த டிசம்பர் 15ம் தேதி காலையில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குவெட்டாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் இந்த நிலநடுக்கங்களால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தான் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
இயல்பு நிலை திரும்புகிறது... தூத்துக்குடியில் ரயில்கள் இயக்கம்... நெல்லையில் பள்ளிகள் திறப்பு!