பல்கலைக்கழகத்தில் பயங்கரம்... மாணவர் துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் பலி!


சார்லஸ் பல்கலைக்கழகம்

செக் குடியரசின் பிரேக் நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்லஸ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் டேவிட் கொசாக் ( 24 ) என்ற மாணவர் படித்து வந்தார். படிப்பில் சிறந்த மாணவராக அவர் விளங்கி வந்தார். இந்த நிலையில் இன்று காலை தத்துவத்துறை கட்டிடத்திற்கு வந்த அவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் அப்பாவி மாணவர்கள் 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒன்பது பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கியால் சுட்ட மாணவன் டேவிட் கொசாக்கை பிடிக்க முயன்ற போது அவர்களை நோக்கியும் துப்பாக்கியால் சுட முயன்றார் கொசாக். அதனால் அவரை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த மாணவர் கொல்லப்பட்டார். இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. அந்த கட்டிடத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த தகவல்கள் அறிந்ததும் பிரதமர் பீட்டர் ஃபியாலா தனது சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு பிரேக் நகருக்கு விரைகிறார். இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் விட் ரகுசான் கூறுகையில், “மக்கள் போலீஸாருடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன். குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார். இருப்பினும் வளாகம் முழுவதும் போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் எந்த தீவிரவாத நோக்கத்துடனும் அமைப்புடனும் தொடர்புடையது இல்லை எனவும் விட் ரகுசான் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தில் வெடிபொருள்கள் ஏதேனும் உள்ளதா எனக் காவல்துறையினர் ஆய்வு நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


இதையும் வாசிக்கலாமே...

இயல்பு நிலை திரும்புகிறது... தூத்துக்குடியில் ரயில்கள் இயக்கம்... நெல்லையில் பள்ளிகள் திறப்பு!

x