பாகிஸ்தான் பொருளாதாரம் சீர்குலைந்ததன் பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்விக்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விளக்கமளித்துள்ளார்.
பொருளாதார சீரழிவின் உச்சத்தில் பரிதவித்து நிற்கிறது பாகிஸ்தான் தேசம். அதிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் முதல் சீனா வரை கையேந்தி நிற்கிறது அந்த நாடு. அறிவிக்கப்படாத திவால் நிலைகுலைவில் தவித்து வரும் பாகிஸ்தான், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொதுத் தேர்தலையும் எதிர்கொண்டுள்ளது.
இதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நவாஸ் ஷெரீப் களமிறங்குகிறார். 73 வயதாகும் இவர், இதற்காக தனது நான்காண்டு இங்கிலாந்து வாசத்தை முடித்துக்கொண்டு தாய்நாடு திரும்பியிருக்கிறார். பொருளாதார தேக்கம், இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டதால் அவரது கட்சியினரின் போராட்டங்கள், பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் மத்தியில் மீண்டும் பிரதமாராகும் ஆவலில் நவாஸ் ஷெரீப் முன்னேறி வருகிறார்.
வேட்பாளர் தேர்வுக்காக விண்ணப்பித்த தனது கட்சியினர் மத்தியில் நவாஸ் ஷெரீப் உரையாடுகையில், வெகுவாய் உருக்கம் காட்டினார். ”1993, 1999 மற்றும் 2007 என பிரதமராக பதவி வகித்த 3 ஆட்சிக்காலங்களிலும் ராணுவத்தினர் தலையீட்டால் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். பாகிஸ்தானின் பொருளாதாரம் இந்தளவுக்கு சீரழியக் காரணம் இந்தியா அல்ல; ஏன், அமெரிக்காவோ ஆப்கானிஸ்தானோ கூடஅல்ல.
நமது காலில் நாமே துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது போன்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ராணுவத்தினர் பதவி துறக்கச் செய்தனர். தங்களுக்கு வசதியானவர்களை (இம்ரான்கான்) ஆட்சியில் அமரச் செய்தனர். இவர்களே பாகிஸ்தான் பொருளாதாரம் சீரழியக் காரணம்” என்றார்.
பாகிஸ்தானில் ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கும் ராணுவத் தலைமை தொடர்பாக 3 முறை பிரதமராக இருந்தவரும், நான்காவது முறையாக கோதாவில் குதிப்பவருமான நவாஸ் ஷெரீப் வாய் திறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாகிஸ்தான் பாதிப்புகள் சகலத்துக்கும் இந்தியாவை குறைகூறி வந்த அந்நாட்டு ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மத்தியிலிருந்து முற்றிலும் வேறான குரல் எழுந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.