சமூக ஊடக புகழ் காரணமாக கோடிகளில் சம்பாதிக்கும் நாய் ப்ரோடி, சர்வதேச செலிபிரிட்டிகளில் ஒன்றாக சேர்ந்திருக்கிறது.
அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடாவை சேர்ந்த கிளிஃப் பிரஷ் அடிப்படையில் ஒரு கணக்காளர். செழிப்பான வருமானம் இல்லாதபோதும் வாழ்க்கையை ஓட்டுவதற்கு அந்த வேலை போதுமானதாக இருந்தது. இருந்தாலும் தனக்காக மட்டுமன்றி தன்னுடைய அளவில் பெரிய நாயான ப்ரோடிக்காக கூடுதல் வருமானம் குறித்து அவ்வப்போது யோசித்தார். இதற்கிடையே கொரோனா காலத்தில் பெரும்பாலனவர்களைப் போன்றே கிளிஃப் பிரஷ் தனது நாயோடு வீட்டில் முடங்கிப்போனார்.
அப்போது பொழுதைப்போக்கும் நோக்கில் தனது செல்ல நாயுடன் புகைப்படம், வீடியோ எடுத்து நண்பர்கள் பார்வைக்காக சமூக ஊடகங்கள் பகிர ஆரம்பித்தார். அப்போது அந்த மேஜிக் நிகழ்ந்தது. எங்கிருந்தோ ப்ரோடிக்கு என விசிறிகள் திரண்டு வந்தனர். 4 வயது நாயை ஆன்லைனில் கொஞ்ச ஆரம்பித்தனர். குழந்தைகள் ஆலாதித்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்ததும் ப்ரோடியின் விசிறிகள் கோரிக்கைக்காக வெளியே செல்ல வேண்டியதாயிற்று. ப்ரோடியை சிறப்பு விருந்தினராக அழைக்க, புகைப்படம் வீடியோ எடுக்க, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க என கிளிஃப் பிரஷ் கடைசியில் தனது முழுநேர வேலையை கைகழுவ வேண்டியதாயிற்று.
இப்போது ப்ரோடிக்கு டிக் டாக் தளத்தில் மட்டும் 60 லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். உலகின் பல்வேறு மூலைகளுக்கும் நாயோடு பறந்து செல்கிறார். விமானத்தில் முதல் வகுப்பில் ப்ரோடி பயணிக்கிறார். கிளிஃப் வேலையை விட்டாலும், ப்ரோடிக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது. மியாமி பீச் காவல்துறையில் கவுரவ போலீஸாக ப்ரோடி இணைந்திருக்கிறது.
ஒரு பகுதி நேர வருமானமாக இருந்து விட்டுப் போகட்டும் என கிளிஃப் ஆரம்பித்த ப்ரோடிக்கான சமூக ஊடக தளங்கள் அனைத்தும் பணம் காய்க்கும் மரங்களாக மாறி இருக்கின்றன. கரடி பொம்மை போன்று இருக்கும் ப்ரோடிக்காக பிரத்யேக வசதிகள் செய்திருக்கும் கிளிஃப், அதன் பொருட்டான அனைத்தை நகர்வுகளையும் சமூக ஊடகங்களில் பதிந்து வருகிறார்.
ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் ப்ரோடியின் விசிறிகளில் அடங்குவார்கள். கோடிகளில் புரளும் அளவுக்கு ப்ரோடி மூலம் கிளிஃப் பிரஷ் வருமானத்தில் கொழித்து வருகிறார். ஒரு கணக்காளராக இருந்தபோதும், தற்போது வருமானம் அதிகரித்து விட்டதால் தனியாக அலுவலகம் வைத்து வரும்படி செலவுகளை பராமரித்து வருகிறார்.
கொரோனா காலம் அழிவை மட்டுமல்ல சிலருக்கு வாழ்வையும் தந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்றும் 49 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்திலிருந்து இதுவரை 141 பேர் வெளியேற்றம்
விவாகரத்து ஆனதும் மகனைத் தத்துக் கொடுத்த சின்னத்திரை நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!