எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ட்விட்டர் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களிடமிருந்தும் மாதாந்திர கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்கியது முதல் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். ட்விட்டர் பெயரை எக்ஸ் என்று மாற்றியதுடன், ஊழியர்கள் குறைப்பு, பணம் கொடுத்து பிரிமியம் அக்கௌன்ட் உள்ளிட்ட பல மாற்றங்களை செய்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் எதன் யாகுவை எலான் மஸ்க் சந்தித்து உரையாடினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த உரையாடலில் செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் வெறுப்பு பேச்சுக்கு எதிராக போராடுவதற்கும் இடையே ட்விட்டரின் சமநிலையை ஏற்படுத்துமாறு மஸ்க்கை எதன் யாகு கேட்டுக்கொண்டார். இதற்கு போலி கணக்குகளின் நடமாட்டமே காரணம் என்ற மஸ்க், இதனை தடுக்க வரும் காலத்தில் எக்ஸ் தளத்தை முழுமையான கட்டண வலைத்தளமாக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.
எக்ஸ் இணையதளத்திற்கு ஒரு கட்டண சுவரை அமைப்பதன் மூலம் தான் போலி கணக்குகளை முழுவதுமாக ஒழிக்க முடியும் என்று மஸ்க் குறிப்பிட்டுள்ளார். தற்போது பிரிமியம் சேவைகளுக்கு மட்டுமே பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் விரைவில் 100% கட்டண வலைதளமான மாற்ற மஸ்க் திட்டமிட்டிருக்கிறார். எனினும் பயனாளர்களிடம் இருந்து எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும், சந்தா செலுத்துவதால் கிடைக்கும் அம்சங்கள் என்ன என்பது குறித்த விவரங்களை அவர் பகிரவில்லை.