தினசரி ஓடி உடற்பயிற்சி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்கப்படும் என ஒரு சீன நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் பின்னுள்ள பலாபலன்களை அறிந்த பிற நிறுவனங்கள் அவற்றை பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன.
பணியாளர்கள் ஆரோக்கியமாக இருப்பதும், அதன் வாயிலாக திறம்பட பணியாற்றுவதுமே ஒரு நிறுவனம் சிறப்பாக இயங்குவதற்கு அடிப்படையாகும். கடினமாக உழைக்க வேண்டும் என்ற காலம் மலையேறி போயிருக்கிறது; குறிப்பிட்ட நேரத்தில் திறம்பட ஊழியர்கள் உழைப்பதை நிறுவனங்கள் எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. அவ்வாறு உழைப்பதற்கு உடற்தகுதி அடிப்படை அவசியமென்பதால், பணியாளர்களை உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு ஒரு சீன நிறுவனம் சாதுர்யமான திட்டத்தை அமல்படுத்தியது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள டோங்போ பேப்பர் நிறுவனம் புதுமையான போனஸ் திட்டத்தை அறிவித்தது. அதன்படி பணியாளர்கள் குறைந்தபட்சம் 50 கிமீ ஓடினால் போனஸ் பெற தகுதி பெறுகிறார்கள் என அறிவித்தது. இதன்மூலம் பணியாளர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அதனை நோக்கி ஊக்குவிக்கும் நிறுவனத்தால் சாத்தியமானது.
ஒரு ஊழியர் ஒரு மாதத்திற்கு 50 கிமீ ஓடினால் முழு மாதாந்திர போனஸை அனுபவிப்பார்; இதற்கு அப்பால் 40 கிமீ ஓடுவதற்கு 60 சதவீதமும், 30 கிமீ ஓடுவதற்கு 30 சதவீதமும் போனஸ் வழங்க திட்டமிடப்பட்டது. மேலும், ஒரு மாதத்திற்கு 100 கிமீ ஓடுபவர்களுக்கு கூடுதலாக 30 சதவீதம் வழங்கப்படும் எனவும் அறிவித்தது.
நிறுவனம் வழங்கிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றினை பணியாளர்கள் கையில் கட்டிக்கொண்டால் போதும். பணியாளர் நடப்பது, ஓடுவது, நடைப்பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்டவற்றை ஸ்மார்ட் வாட்ச் பதிவுசெய்து கொள்ளும். இந்த திட்டம் மலையேற்றம் மற்றும் வேக நடைப்பயிற்சி ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது, இது தேவையான மொத்த உடற்பயிற்சியில் முறையே 60 மற்றும் 30 சதவீதம் ஆகும்.
இந்த சீன நிறுவனம் அன்றாடம் தனது ஊழியர்களின் உடற்பயிற்சி அடைவைக் கண்காணித்து வருகிறது, "எங்கள் ஊழியர்கள் அனைவரும் முழு அளவிலான போனஸைப் பெற தகுதியுடையவர்களாக மாறியுள்ளனர்" என்கிறது இந்த நிறுவனம்.
அலுவலகப் பணியானது, பலவிதமான உடல்நல விளைவுகளுடன் தொடர்புடையது. முழு உடல் தகுதியோடு பணியாளர்கள் வேலையில் ஈடுபடுவதே நிறுவனத்துக்கு நலம் சேர்ப்பதாக அமையும். பல ஊழியர்கள் நீரிழிவு போன்ற ஏற்கனவே இருந்த ஆரோக்கிய பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக விடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். பழைய பாதிப்புகளை கட்டுக்குள் வைத்ததோடு, புதிய பாதிப்புகள் வராதும் தடுக்கவும் முடிந்திருக்கிறது