பாகிஸ்தானில் நேற்றிரவு முதல் இணைய சேவை முடக்கம் கண்டிருப்பதற்கு, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்பான மர்ம நிகழ்வுகள் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியும், நிழலுலக தாதாவுமான தாவூத் இப்ராஹிம், நேற்றிரவு முதல் இணையத்தில் அதிகம் விவாதிக்கப்படும் நபராக மாறியிருக்கிறார். மர்ம நபர் ஒருவரால் உணவில் விஷம் வைக்கப்பட்டதில், அதனை உண்ட தாவூத் இப்ராஹிம் கவலைக்கிடமான சூழலில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியானது. சற்று நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனதாகவும் அடுத்த தகவல் வட்டமடித்தது.
ஆனால் அவற்றை உறுதிபடுத்திக்கொள்வதற்கான தகவல்தொடர்பு உபாயங்களுக்கு உதவும் இணைய வசதி இன்றி பாகிஸ்தான் நெட்டிசன்கள் நேற்றிரவு தவித்துப்போனார்கள். இடையே சற்று நேரம் இணையம் இயல்புக்கு திரும்பியதும், இரண்டையும் முடிச்சிட்டு கவலை பதிந்தார்கள். தாவூத் இப்ராஹிமின் எதிர்பாரா மரணம் மற்றும் அதையொட்டி எழுந்த மேலிடத்து குழப்பங்களை மறைக்கவே இணையம் முடக்கப்பட்டதாக, இரண்டையும் அவர்கள் முடிச்சிட்டனர்.
பாகிஸ்தானின் பிரதான நகரங்களான கராச்சி, இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் ஆகிய மாநகரங்களில் நேற்றிரவு 8 மணி முதலே இணைய சேவை முடங்கிப்போனது. தாவூத் இப்ராஹிம் விவகாரத்துக்கு அப்பால், சிறையிலிருக்கு பாக் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதாகவும், அதன் பரவலை தடுக்கவும், பதிவுகளை நீக்கவும் இணையத்தை முடக்கி வைத்திருப்பதாகவும் வெளிநாடு பாகிஸ்தானியர்கள் புலம்பினர்.
1993, மும்பை தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வினை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆசிர்வாதத்தில் தாவூத் இப்ராஹிம் நிகழ்த்தியதாக இந்திய விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இதன் அடிப்படையில் தாவூத் வகையறாவின் இந்திய சொத்துக்கள் முடக்கப்பட்டதோடு அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்துள்ளனர். வளைகுடா தேசங்களில் அடைக்கலமாகி இருந்த தாவூத் இப்ராஹிம் பாதுகாப்புக்காக பின்னர் பாகிஸ்தானில் மறைந்து வாழ்ந்தார்.
அவரை கைது செய்வது அல்லது கொல்வது என இந்தியா சார்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால முயற்சிகள் எடுபடவில்லை. இதற்கிடையே பாகிஸ்தானில் மறைந்து வாழும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள், கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து கொல்லப்பட்டதன் வரிசையில், தாவூத் இப்ராஹிமுக்கும் நாள் குறிக்கப்பட்டதாக ஊகங்கள் கிளம்பின. அவற்றை உறுதி செய்வதுபோல தற்போது சம்பவம் ஒன்றும் அரங்கேறி உள்ளது. இதன் பின்னே, இணையம் முடங்கியது தொடர்பாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் கருத்து தெரிவிக்க மறுத்ததுள்ளதும் ஐயங்களை அதிகப்படுத்தி உள்ளன.