ராஜ்நாத் சிங் பேச்சுக்கு பாகிஸ்தான் ஆத்திரம்... இந்தியா - பாக். இடையிலான புதிய பதற்றம் தேர்தலில் பாஜகவுக்கு உதவுமா?


பாகிஸ்தான் - இந்தியா

இந்தியாவில் பயங்கரவாதத்தை நிகழ்த்திவிட்டு எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் ஒளிந்துகொள்ளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்துக்களுக்கு பாகிஸ்தான் பகிரங்க கண்டனம் தெரிவித்துள்ளது.

ஊடக பேட்டி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்நாத் சிங், “பயங்கரவாதிகள் இந்தியாவில் அமைதியை சீர்குலைத்து விட்டு அண்டை நாட்டிற்கு தப்பி ஓட முயன்றால், அவர்களைக் கொல்ல பாகிஸ்தானுக்குள் நுழையவும் இந்தியா தயங்காது” என்று தெரிவித்திருந்தார். உடனடியாக அதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்

சற்று முன்னதாக இங்கிலாந்து நாளிதழான ’தி கார்டியன்’ அண்மையில் வெளியிட்ட ஒரு செய்தி, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை உருவாக்கியது. ’2019-ம் ஆண்டின் புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் தேசிய பாதுகாப்பிற்கான துணிச்சலான அணுகுமுறை ஒன்றை இந்தியா மேற்கொள்ள ஆரம்பித்தது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் குற்றச்செயல்களை நிகழ்த்திவிட்டு பாகிஸ்தானில் சென்று ஒளிந்துகொள்ளும் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களை இயக்குவோரை, இந்திய உளவாளிகள் திட்டமிட்டு படுகொலை செய்வதாக’ தி கார்டியன் செய்தி வெளியிட்டிருந்தது.

அது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்திய அமைச்சரின் கருத்துக்களுக்கு பாகிஸ்தான் உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் கான்வாய் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. அப்போது முதலே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மோசமடைந்தன. புல்வாமா மரணங்களுக்கு காரணமான பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், எல்லை தாண்டி துல்லியத் தாக்குதலை இந்தியா நடத்த வழிவகுத்தது.

அதன் பிறகு பாகிஸ்தான் உடனான அனைத்து சுமூக உறவுகளும் சீர்குலைந்திருந்தன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் புதிய குற்றச்சாட்டினை சுமத்தியது. பாகிஸ்தான் மண்ணில் அந்நாட்டு குடிமக்கள் இருவரைக் கொலையானதில் இந்திய ஏஜென்டுகளுக்கு தொடர்புள்ளதாகவும், அதையொட்டிய நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாகவும் பாகிஸ்தான் கூறியது.

”பயங்கரவாதிகள் என்ற பேரில் பாகிஸ்தான் குடிமக்களை நியாயமற்ற முறையில் இந்தியா கொன்று வருவதாகவும், அதற்கு இந்தியா தயாராக இருப்பதாகக் கூறுவது குற்றத்தை தெளிவாக ஒப்புக்கொள்வதாக அமைகிறது" என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் "இந்தியாவின் கொடூரமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் பொறுப்பேற்க வேண்டியது அவசியம்" என்று பஞ்சாயத்துக்கு சர்வதேச நாடுகளையும் பாகிஸ்தான் இழுத்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் விவரிக்கும் பாகிஸ்தான், “பிராந்தியத்தில் அமைதிக்கான தனது உறுதிப்பாட்டை பாகிஸ்தான் எப்போதும் வெளிப்படுத்தி வருகிறது. இருப்பினும், அமைதிக்கான எங்கள் விருப்பத்தை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. பாகிஸ்தானின் உறுதி மற்றும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனுக்கு வரலாற்றில் சான்றுகள் உண்டு” என்று மறைமுக மிரட்டலையும் பாகிஸ்தான் விடுத்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் குறிவைத்து கொல்லப்படும் விவகாரம் சூடு பிடித்திருப்பது, மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்தவும் உதவக்கூடும். எல்லை தாண்டி இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல்கள் இந்தியர்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்கியதில், அது 2019 தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு... தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

x