வைரல் வீடியோ... அமெரிக்காவின் லிபர்ட்டி சிலை பதிவுசெய்த நியூயார்க் நிலநடுக்கம்


சுதந்திர தேவி சிலை உடன் மின்னல் மற்றும் நிலநடுக்கம்

அமெரிக்காவை நேற்று பதறவைத்த நிலநடுக்கத்தை, நியூயார்க்கில் அமைந்திருக்கும் சுதந்திர தேவி சிலையின் கண்காணிப்பு கேமரா பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் அரிய நிலநடுக்கத்தை சுட்டிக்காட்டும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்றைய தினம் நியூயார்க் நகரத்தில் 4.8 ரிக்டர் அளவில் அரிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்றான சுதந்திர தேவி சிலையின் உச்சியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த நிலநடுக்கத்தின் கால் நிமிடக் காட்சிகள் பதிவாகி உள்ளன.

நியூயார்க் நிலநடுக்கம்

அமெரிக்காவில் தலைக்காட்டிய அசாதாரணமான இந்த நிலநடுக்கம், நியூயார்க் மற்றும் பிலடெல்பியாவின் வானளாவிய கட்டிடங்களில் இருந்து கிராமப்புற நியூ இங்கிலாந்து வரை மில்லியன் கணக்கான மக்களை பதறச் செய்தது.

கடந்த சில தினங்களாகவே தைவான், ஜப்பான், இந்தியாவின் இமாச்சல் பிரதேசம் என நிலநடுக்கங்கள் அச்சுறுத்தி வருகின்றன. இதன் வரிசையில் நியூயார்க் நிலநடுக்கமும் லேசான அதிர்வாக எழுந்தது. ஆனால் அமெரிக்காவுக்கு நிலநடுக்கம் என்பது அரிதானது. நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் என்பவர், "கடந்த நூற்றாண்டில் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் இதுவும் ஒன்று" என்று வர்ணித்திருக்கிறார்.

நேற்றைய அமெரிக்க நிலநடுக்கம் நியூயார்க் நகருக்கு மேற்கே 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய நியூ ஜெர்சியின் டெவ்க்ஸ்பரியில் மையம் கொண்டிருந்தது. இது தரையடியில் 4.7 கிமீ ஆழத்தில் பதிவாகி உள்ளது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் உறுதி செய்தது.

நியூயார்க் நிலநடுக்கம்

பெரிய பொருட்சேதமோ மனிதர்களுக்கான காயங்களோ பதிவாகவில்லை என்றாலும், நிலநடுக்கத்தை மக்கள் தெளிவாக உணர்ந்தார்கள். மீண்டும் நிலநடுக்கம் எழுந்தால் குடிமக்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தல் விடுமளவுக்கு இந்த நிலநடுக்கம் அங்கே முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நியூ ஜெர்சி கவர்னர் பில் மர்பியை தொடர்பு கொண்டு பூகம்பம் குறித்து கேட்டறிந்தார். அவசியமெனில் உதவிகள் ஒருங்கிணைக்கப்படும் என வெள்ளை மாளிகை ஒரு அறிக்கை வெளியிட்டது.

இதற்கிடையே சுதந்திர சிலையின் பார்வையில், அதன் உச்சியில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு கண்காணிப்புக் கேமராவில் பதிவான நிலநடுக்க அதிர்வுகளை சுட்டிக்காட்டும் வீடியோ வெளியானது. இந்த நிலநடுக்கத்துக்கு முந்தைய நாள் அதாவது நேற்று முன்தினம், லிபர்ட்டி சிலை பின்னணியில் மின்னல் தெறித்ததும், அது சுதந்திர தேவி ஏந்தியிருக்கும் ஜோதியை தொடுவதாக பளிச்சிட்டது. புகைப்படக்கலைஞர் டான் மார்ட்டின் என்பவர் எடுத்த இத்தகைய அரிய புகைப்படமும் இந்த நிலநடுக்க வீடியோவுடன் சேர்ந்து வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


ஓசூரில் பரபரப்பு... வாகன தணிக்கையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியது!

x