பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சென்று ஒளிந்தாலும் கொல்லப்படுவார்கள்: ராஜ்நாத் சிங் அதிரடி பேட்டி!


ராஜ்நாத் சிங்

இந்தியாவில் குற்றத்தைச் செய்துவிட்டு, பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தாலும், அந்நாட்டிற்குள் நுழைந்து இந்தியா அவர்களை கொல்லும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

கடந்த 2020ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானில் தஞ்சமடைந்த பயங்கரவாதிகள் 20 பேர், இந்திய உளவு அமைப்பால் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனின் 'தி கார்டியன்' நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராஜ்நாத் சிங், “இந்தியாவில் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு பயங்கரவாதிகள் எல்லை தாண்டி, பாகிஸ்தானுக்குள் நுழைந்தால், இந்தியா அந்நாட்டிற்குள் நுழைந்து அவர்களை கொல்லும்.

இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண விரும்புகிறது. ஆனால் யாராவது இந்தியாவை மீண்டும் மீண்டும் கோபமூட்டினால், இந்தியாவுக்குள் வந்து பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்க முயன்றால், நாங்கள் அவர்களை விட்டுவைக்கமாட்டோம்” என்றார்.

பயங்கரவாத தடுப்பு

காஷ்மீரில் கடந்த 2019ம் ஆண்டு இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் படை தாக்குதல் நடத்தினர். அதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மீண்டும் பாதிப்புக்குள்ளாகின. இந்த சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் உள்ள ஒரு பயங்கரவாதத் தளம் மீது இந்தியா, வான்வழித் தாக்குதல் நடத்தியது.

தங்களது நாட்டில் குடிமக்கள் இருவரை, இந்திய பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் கொன்றதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக இந்த ஆண்டு துவக்கத்தில் பாகிஸ்தான் கூறியிருந்தது. இந்த குற்றச்சாட்டை மறுத்த இந்தியா, இது தவறானது மற்றும் பொய் பிரச்சாரம் என தெரிவித்தது.

சில மாதங்களுக்கு முன்பு கனடாவும், அமெரிக்காவும் தங்கள் நாடுகளில் இதேபோன்ற நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில் இந்தியா மீது குற்றம்சாட்டி 'தி கார்டியன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x