எகிறிய முட்டை விலை... மக்களிடம் மன்னிப்பு கேட்டார் ரஷ்ய அதிபர் புதின்


ரஷ்ய அதிபர் புதின் - முட்டைகள்

ரஷ்யாவில் முட்டை விலை வெகுவாய் உயர்ந்தது தொடர்பாக, நாட்டு மக்களிடம் அதிபர் புதின் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருக்கிறார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, 2 வருடங்கள் நிறைவடைய இருக்கின்றன. ஒரு சில வாரங்களில் உக்ரைனை வீழ்த்திவிடுவோம் என்ற ரஷ்யாவின் நம்பிக்கையில் மண் விழுந்திருக்கிறது. பெரும் பின்புலம் இல்லாத உக்ரைன், வல்லரசு தேசமான ரஷ்யாவை திடமாய் எதிர்கொண்டு வருகிறது. மேற்கு நாடுகளின் ஆதரவு காரணமாக உக்ரைனுக்கு இது சாத்தியமானது. இதனால் போரில் வெல்லவும் முடியாது, பின்வாங்கவும் வழியின்றி ரஷ்யா தவித்து வருகிறது.

புதின்

இழுக்கும் போர் நடவடிக்கையால், ரஷ்யாவின் பொருளாதாரம் அடிவாங்கியிருக்கிறது. சர்வதேச நாடுகளின் தடைவிதிப்பால் உலக நாடுகளுக்கான ரஷ்யாவின் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் விலைவாசி உயர்வும், பணவீக்கமும் நாட்டு மக்களை படுத்தி எடுக்கிறது. உக்ரைன் மீதான போர் இழுபறியால் பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இவற்றின் மத்தியில், எகிறும் முட்டை விலைக்காக நாட்டு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரியிருக்கிறார் அதிபர் புதின்.

வருடந்தோறும் டிசம்பரில் நடைபெறும் பொதுமக்களுடனான நேரடி சந்திப்பு ஒன்றின்போது, புதின் இவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கிறார். அதிபரிடம் நேரடியாக கேள்வி கேட்கும் நிகழ்வில் முதியவர் ஒருவர், முட்டை விலை வெகுவாய் உயர்ந்திருப்பது குறித்து கவலை தெரிவித்தார். கடந்த சில மாதங்களின் முட்டை மற்றும் சிக்கன் விலை 40 சதவீதம் உயர்ந்தது, உண்மையிலேயே ரஷ்ய மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

முட்டை வாங்கும் புதின்

முதியவருக்கு பதிலளித்த புதின் ”முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இது அரசு நிர்வாகத்தின் தோல்வி என்பதை உணர்கிறேன். விரைவில் இந்தப் பிரச்சினை தீரும் என்றும் உறுதியளிக்கிறேன்” என்று பெரியவரை சமாதானப்படுத்தினார். அதிபர் புதினின் எளிமையான எதிர்வினை என்று அரசு ஊடகங்கள் அதனை சிலாகித்து வருகின்றன. ஆனால், உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ஏற ஆரம்பித்த விலைவாசி எப்போது இயல்புக்கு திரும்பும் என்ற கவலையில் ரஷ்ய மக்கள் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x