அன்டார்டிகாவை உலுக்கும் ஆயிரக்கணக்கான பென்குயின் மரணங்கள்; பறவைக் காய்ச்சல் காரணமா?


அன்டார்டிகாவில் பென்குயின்கள்

பூமியின் தெற்கு கண்டமான அன்டார்டிகாவில் ஆயிரக்கணக்கிலான பென்குவின்கள் இறந்திருப்பதன் பின்னணியில் புவி வெப்பமயமாதல் மற்றும் பறவைக் காய்ச்சல் காரணிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

பூமியில் மனிதனின் காலடி அதிகம் தீண்டாத அரிய பிராந்தியங்களில் ஒன்று அன்டார்டிகா பனிக் கண்டம். ஆனால் மனிதர்கள் தயவில் அதிகரித்து வரும் வெப்பமயமாதல் எதிரொலியாக, இங்கேயும் இயற்கை அதன் சமநிலையில் குலைந்துள்ளது. அவற்றின் அடையாளங்களில் ஒன்றாக ஆயிரக்கணக்கான பென்குயின் பறவைகள் இங்கே செத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தையும் அது அதிகரித்துள்ளது.

இறந்து கிடக்கும் பென்குயின்கள்

அன்டார்டிகாவில் 532 அடேலி பென்குயின்கள் இறந்துவிட்டதாக கடந்த மாதம் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியாளர்களின் பயணம் கண்டு சொன்னது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் ஃபெடரேஷன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை, அன்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின் இறந்திருப்பதாக தெரிவித்தது. முதல்கட்ட ஆய்வில் பென்குயின் பெரும் இறப்புகளின் பின்னணியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் காரணமாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

H5N1 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே அன்டார்டிகாவில் அதிகரித்து இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பென்குயின் மரணங்களை அடுத்து அதன் பின்னணி குறித்து அறிய, அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஃபெடரேஷன் பல்கலைக்கழகத்தின் வனவிலங்கு உயிரியலாளர் மீகன் தேவார் என்பவர், "இது ஏற்கனவே காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பென்குயின் உள்ளிட்ட துருவப்பகுதி உயிரினங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

அன்டார்டிகா பென்குயின்கள்

ஹெரோயினா தீவில் உறை வெப்பநிலையில் பனியில் மூடப்பட்டிருந்த அடெலி பெங்குவின் சடலங்கள் புதிய ஆய்வுக்கு காரணமாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 2,80,000 அடேலி பென்குயின்கள் ஹெரோயினா தீவில் இனப்பெருக்கம் செய்கின்றன. அப்படி வருகை தரும் பென்குயின்கள் மத்தியில் பரவும் பறவைக்காய்ச்சல் அச்சுறுத்தல் அவற்றின் பல்லாயிரம் உயிர்ப்பலிகளுக்கு காரணமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அண்டார்டிக் தீபகற்பம் மற்றும் அருகிலுள்ள மூன்று தீவுகளில் பறவைக் காய்ச்சல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பென்குயின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளை உண்ணும் ஸ்குவா கடற்பறவைகளில் இந்த பறவைக் காய்ச்சலில் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அன்டார்டிக் ஆராய்ச்சியாளர்களின் கணக்கெடுப்பின்படி, ஆண்டுதோறும் சுமார் 20 மில்லியன் ஜோடி பென்குயின்கள் அன்டார்டிக் பகுதியில் இனப்பெருக்கம் செய்கின்றன. இங்கே தற்போது பரவும் பறவைக்காய்ச்சல் பென்குயின் இனத்துக்கு அச்சுறுத்தலாக எழுந்திருப்பது சூழியல் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஒற்றை உயிரினத்தின் மீதான பாதிப்பு என்பது தொலைநோக்குப் பார்வையில் புவி உயிர்கோளத்துக்கு விடுக்கபடும் எச்சரிக்கை என்பதால், பென்குயின் மரணங்கள் புதிய கவலையை தந்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

இன்று மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை... சிக்காத சிறுத்தையால் தவிக்கும் வனத்துறை!

இன்று முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

x