ஓமன் சுல்தானுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு!


குடியரசு தலைவர் மாளிகையில் ஓமன் சுல்தானை வரவேற்ற குடியரசு தலைவர், பிரதமர்.

மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை, ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர்.

ஓமன் சுல்தானை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர்

ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மூன்று நாள் சுற்றுப் பயணமாக முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று வந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வீ.முரளிதரன் வரவேற்றார். அதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

வளைகுடா பிராந்தியத்தில் ராணுவ ஒத்துழைப்பில் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக ஓமன் திகழ்கிறது. இந்தியா - ஓமன் இரு தரப்பு ராணுவ போர் பயிற்சி, உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடைபெறும் ஒரே மேற்கு ஆசிய நாடு ஓமன். அந்நாட்டு சுல்தானின் இந்திய சுற்றுப்பயணமானது இரு நாடுகளுக்கிடையே வெளியுறவு தொடர்பில் முக்கிய மைல் கல்லாக அமையும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனுக்கு வந்த ஓமன் சுல்தான், அந்நாட்டு அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் இந்திய ராணுவ மரியாதையை ஓமன் சுல்தான் ஏற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவருடனான சந்திப்புக்குப் பின்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக், தேசிய நவீன கலை அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார். அதன் பின்னர் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் ஆலோசிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து இந்திய பிரதமர், ஓமன் சுல்தானுக்கு உணவு விருந்து அளிக்க உள்ளார்.

ஓமன் சுல்தானின் இந்திய வருகை இரு நாடுகளிடையேயான உறவை மேலும் பலப்படுத்தும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x