பாலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் புகுந்த இஸ்ரேல் ராணுவத்தின் தேடுதல் வேட்டை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
ஜெனின் நகரம் என்பது மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீன நகரமாகும். சுற்றியுள்ள நகரங்களுக்கு முக்கிய மையமாக செயல்படும் ஜெனின், திடீரென இஸ்ரேல் ராணுவத்தின் சோதனைக்கு ஆளானது. சுமார் இரண்டரை நாளாக நீடித்த சோதனை நடவடிக்கையில், ஹமாஸ் உள்ளிட்ட இதர பாலஸ்தீன ஆதரவு பயங்கரவாதிகளை குறிவைத்து தேடுதல்கள் முடுக்கி விடப்பட்டிருந்தன.
தெருத்தெருவாக சென்று சோதனையிட்டதில் தேடப்பட்ட 60 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ஏராளமான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கையின்போது சில இடங்களில் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பினருக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைக்கும் இடையே மோதல் நிகழ்ந்ததாகவும், இதில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
காசாவில் சல்லடையிட்டு ஹாமாஸ் மற்றும் இதர பாலஸ்தீன ஆயுதக் குழுக்களை இஸ்ரேல் வேட்டையாடி வருகிறது. இதற்காக வடக்கு காசா மட்டுமன்றி, பொதுமக்கள் அதிகம் அடைக்கலமாகி இருக்கும் தெற்கு காசாவிலும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. மருத்துவமனைகள், அகதிகள் முகாம் உள்ளிட்டவற்றில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக கூறி அவற்றில் பலவற்றை இஸ்ரேல் ராணுவத்தினர் தகர்த்தனர்.
இஸ்ரேலின் தாக்குதல் காசாவில் அதிகரித்ததால், பாலஸ்தீனத்தின் பல்வேறு பிராந்தியங்களுக்குள் ஆயுதக் குழுவினர் அடைக்கலமாகி இருக்கக்கூடும் என இஸ்ரேல் கருதியது. இதனையடுத்து ஜெனின் நகரில் அதிரடி வேட்டை நடத்தி பயங்கரவாதிகளை கொன்றும், கைது செய்தும் முடக்கி உள்ளது. மேலும் பாதாள பதுங்குமிடங்கள், வெடிப்பொருட்கள் தயாரிப்பு இடங்கள், இஸ்ரேல் ராணுவ நகர்வுகளை கண்காணிக்கும் மையங்கள் உள்ளிட்டவற்றையும் இஸ்ரேல் ராணுவம் அழித்தொழித்துள்ளது. ஜெனின் நகரத்தின் சோதனை நடவடிக்கைகள் முடிந்ததை அடுத்து, இந்த தகவல்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...