விநோதம்! குடலில் வளர்ந்த 23 வார கரு; தாயையும், குழந்தையையும் காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை


பிரான்ஸ் நாட்டில், எக்டோபிக் பிரக்னன்ஸி என்ற அரிய வகை பிரச்சினையால், குடலில் வளர்ந்து வந்த 23 வார சிசுவை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் மீட்டு காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், அடிவயிற்றில் 10 நாட்களுக்கும் மேலாக வலி இருந்ததால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றிருந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, எக்டோபிக் பிரக்னன்ஸி எனப்படும் பிரச்சினையால், கருப்பைக்கு பதிலாக, குடல் பகுதியில் சிசு வளர்ந்து வந்தது தெரியவந்தது. பொதுவாக இது போன்ற பிரச்சினைகளில் குழந்தைகள் உயிரிழப்பது அதிகம் என்ற நிலையில், உடனடியாக குழந்தையின் உயிரைக்காக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தே அதிர்ச்சியடைந்த போதும், மருத்துவர்களின் நம்பிக்கையால் அறுவை சிகிச்சைக்கு சம்மதித்துள்ளார். இதையடுத்து சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் 23 வாரங்கள் ஆகியிருந்த சிசுவை மருத்துவர்கள் உயிருடன் மீட்டனர். இதையடுத்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த குழந்தை, 3 மாதங்களுக்கு பிறகு தாயுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ புத்தகம் ஒன்றில் தகவல் வெளியிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து குழந்தையை உயிருடன் மீட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பொதுவாக குழந்தைகள் முழு வளர்ச்சியடைந்து பிரசவம் நிகழ 37 முதல் 40 வாரங்கள் வரை ஆகும். 37 வாரங்களுக்கும் குறைவாக பிறக்கும் குழந்தைகள், குறைப்பிரசவமாக கருதப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்!

x