நித்தியானந்தா மற்றும் அவரது அடிவருடிகளின் பெயரால் முன்னிறுத்தப்படும் கைலாசா தேசம், கற்பனை தேசமல்ல என நித்தியின் சிஷ்யைகள் அடித்து சொல்லியிருக்கிறார்கள். மேலும் இதனை நிரூபிக்க கைலாசா தேசத்துக்கு வருகை தருமாறு இருகரம் விரித்து வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பாலியல் மற்றும் ஆட்கடத்தல் வழக்குகளில் இருந்து தப்பிக்க நாட்டை விட்டே ஓடியதாக அறியப்படுபவர் சுவாமி நித்தியானந்தா. அதன் பின்னர் ஆண்டுகள் பல ஆனபிறகும், மனிதர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து உறுதியும் இறுதியுமான தகவல் ஏதும் இல்லை.
பசிபிக் பெருங்கடலின் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு ’கைலாசா’ எனப் பெயரிட்டு அதன் அதிபராக தன்னை அறிவித்துக்கொண்டதாக நித்தியானந்தா செய்திகளில் அடிபட்டார். கொரோனா காலத்தில் நோய்வாய்ப்பட்டதில் ஒருமுறை மரணப்படுக்கையில் விழுந்து எழுந்தார். உடல்நிலை தேறியதும், மீண்டும் இணையம் வாயிலாக தனது ஆன்மிக அலப்பறைகளையும், பக்தர்களிடமிருந்து வசூல் வேட்டையையும் தொடர ஆரம்பித்தார்.
இடையிடையே கைலாசாவை இறையாண்மை மிக்க தேசமாக நிறுவும் நோக்கில் ஐநா முதல் உதிரி தேசங்கள் வரை ஒப்பந்தங்கள் இட்டதாகவும், உரைகள் நிகழ்த்தியதாகவும், அவை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது உள்ளிட்டவற்றையும் நித்தியின் சிஷ்யர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதே வேகத்தில் அந்த பதிவுகளின் பின்னிருக்கும் ஜோடிப்புகளும் அம்பலமாவதுண்டு,
இந்த வகையில் அண்மையில் பராகுவே நாட்டின் வேளாண்துறை உயரதிகாரி ஒருவர் எதேச்சையாய் நித்தி சிஷ்யர்களின் வலையில் விழுந்தார். தன்னிச்சையாய் கைலாசாவுடன் ஒப்பந்தங்களை அவர் மேற்கொண்டதுடன், அதன் இறையாண்மையை வலியுறுத்தியும் வார்த்தைகள் விட்டிருந்தார். பொதுவெளியில் இது நகைப்புக்கிடமானதில், பராகுவே தேசம் சம்மப்ந்தப்பட்ட அதிகாரி அர்னால்டோவை பதவியிலிருந்தே தூக்கியது.
இது தொடர்பான செய்திகள் உலகளவில் ஊடகங்களில் சந்தி சிரிக்க, அவற்றை மறுத்து கைலாசா சார்பில் நித்தியின் சிஷ்யைகள் நீண்ட விளக்கங்களை தந்து வருகின்றனர். அவற்றில் ஒன்றாக கைலாசாவுக்கு வாருங்கள் என அழைப்பும் விடுத்து வருகின்றனர். இதற்கு அப்பால் நித்தி பெயரில் வெளியாகி இருக்கும் அறிவிப்பு ஒன்று, ’கைலாசாவுக்கு வர முடியவில்லை என்ற ஏக்கமா? கவலையை விடுங்கள் கைலாசா உங்களைத் தேடி வரப்போகிறது’ என்றொரு அதிரி புதிரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முனைவர் பட்ட ஆய்வுக்கான உயர்கல்வியை வழங்கப்போவதாக நித்தி அறிவித்திருக்கிறார். ’ஆன்மிகமும், அறிவியலும் கலந்ததாக, உள்ளொளியை பெருக்கும் பிஹெச்டி படிப்பை மேற்கொள்ள வாருங்கள்’ என நித்தி சார்பில் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கட்டண அடிப்படையிலான அருளாசி முதல் ஆன்மிக பயிற்சிகள் வழங்கி வரும் நித்தி குரூப், தற்போது முனைவர் பட்டம் வழங்க முன்வந்திருப்பதன் பின்னணி என்னவாக இருக்கும் என்ற விவாதங்கள் இணையத்தில் எழுந்துள்ளன.
இதையும் வாசிக்கலாமே...