அதிர்ச்சி வீடியோ! திடீரென குறுக்கிட்ட யானை... பதறிப்போன சுற்றுலாப் பயணிகள்; சிப்ஸால் உயிர் தப்பிய அதிசயம்


சுற்றுலா பயணிகளை வழிமறித்த காட்டு யானை.

இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற வேனை யானை திடீரென மறித்தது. தாங்கள் வைத்திருந்த சாண்ட்விச், சிப்ஸ் ஆகிய உணவுப் பொருள்களை தூக்கிவீசி யானையிடமிருந்து அவர்கள் தப்பித்தனர்.

டிரைவர் இருக்கையில் தும்பிக்கையை விட்டு உணவு தேடிய யானை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த காசுன் பசநாயகே குடும்பத்தினர் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். அந்நாட்டில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அந்த குடும்பத்தினர், சமீபத்தில் தெற்கு இலங்கையின் யுவா மாகாணத்தில் இந்திய பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள யாலா தேசிய பூங்காவுக்கு வேனில் சென்றனர். இந்த பூங்கா கொழும்புவிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ளது.

அப்போது காட்டுக்குள் இருந்து திடீரென குறுக்கிட்ட பெரிய யானை ஒன்று வேனை வழிமறித்தது. இதனால் வேனில் பயணித்த காசுன் பசநாயகே குடும்பத்தினர் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். குறிப்பாக வேன் டிரைவர் கலக்கமடைந்தார்.

யானையானது வேனின் ஜன்னலை உடைத்து, தும்பிக்கையை டிரைவரின் இருக்கை அருகே விட்டு, சாப்பிட ஏதாவது கிடைக்குமா என தேடியது.

அப்போது பயத்தில் வேன் டிரைவர், உள்ளே பயணித்தவர்களை நோக்கி, உணவுப் பொருள்கள் ஏதாவது வைத்திருந்தால் தூக்கி வீசுங்கள் என கூச்சலிட்டார். இதையடுத்து காசுன் பசநாயகே, தனது மகன் சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்திருந்த சாண்ட்விச், சிப்ஸ்கள் ஆகியவற்றை யானையின் தும்பிக்கையை நோக்கி வீசினார்.

இதையடுத்து அவற்றை உட்கொண்ட யானை, ஆக்ரோஷத்திலிருந்து அமைதி நிலைக்கு மாறியது. பின்னர் மீண்டும் காட்டுக்குள் சென்றது. இதையடுத்து பசநாயகே குடும்பத்தினர் பயணத்தை தொடர்ந்தனர்.

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் சென்ற வேனை, யானை வழிமறிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

x