துபாயில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டில் மணிப்பூரின் 12 வயது சிறுமி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 28வது பருவநிலை உச்சி மாநாடு (சிஓபி-28) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கடந்த நவம்பர் 30ம் தேதி துவங்கி டிசம்பர் 12ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் 190 நாடுகளில் இருந்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சி, கரியமில வாயு வெளியீட்டை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு சூழலியல் சார்ந்த அம்சங்கள் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கூடி விவாதித்தனர்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் டிமோர் லெஸ்டி (இந்தோனேசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட தீவு) நாட்டின் சிறப்பு தூதராக மணிப்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜம் பங்கேற்றார்.
மாநாட்டின் கடைசி நாளில் மேடையில் திடீரென ஏறிய லிசிபிரியா கங்குஜம் தான் கையில் வைத்திருந்த அட்டையை மேடையில் உயர்த்தி காண்பித்தார். அதில், "புதைப்படிவ எரிபொருளுக்கு தடைவிதியுங்கள். நமது புவியையும், நமது எதிர்காலத்தையும் பாதுகாப்பீர்" என்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், மேடையில் இந்த வாசகங்களை லிசிபிரியா உரக்கமாக கூறினார். அதன் பிறகு அவரை பாதுகாவலர்கள் மேடையிலிருந்து கீழே இறக்கினர்.
இதுகுறித்த வீடியோவை லிசிபிரியா, தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 28வது பருவநிலை உச்சி மாநாட்டின் பொது தூதுவர் மஸ்ஜித் அல் சுவைதி கூறுகையில் "பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த சிறுமி பேசியதும் சூழலியலில் அவருக்கு உள்ள ஈடுபாட்டையும் கண்டு வியந்து பாராட்டுகிறேன்" என்றார்.
இதேபோல் அரங்கில் கூடியிருந்தவர்களும் சிறுமியின் விழிப்புணர்வு முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். சில விநாடிகளே மேடையேறினாலும், 12 வயது மணிப்பூர் சிறுமி லிசி பிரியா, தனது செயலால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.