அடேயப்பா... ரூ.1446 கோடிக்கு லண்டனில் சொகுசு மாளிகை: கோவிஷீல்டு சிஇஓ வாங்கினார்!


அபெர்கான்வே ஹவுஸ்

கொரோனாவுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா லண்டனின் மையப்பகுதியில் சுமார் 138 மில்லியன் GBP (இந்திய மதிப்பில் சுமார் 1446 கோடி ரூபாய்) மதிப்புள்ள ஒரு மாளிகையை வாங்கியுள்ளார்.

அதார் பூனவல்லா

'தி பைனான்சியல் டைம்ஸ்’ செய்தியின்படி, அதார் பூனாவல்லா குடும்பம், ஹைட் பார்க் அருகே அபெர்கான்வே ஹவுஸ் என்று பெயரிடப்பட்ட 25,000 சதுர அடி மேஃபேர் மாளிகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது, இது இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இந்த ஆண்டின் மிகவும் விலையுயர்ந்த வீடு விற்பனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

க்ரோஸ்வெனர் சதுக்க மாளிகையை கட்டிய 20-ம் நூற்றாண்டின் தொழிலதிபர் ஹென்றி டங்கன் மெக்லாரன் என்ற பரோன் அபெர்கான்வேயின் நினைவாக இந்த சிவப்பு செங்கல் மாளிகைக்குப் பெயரிடப்பட்டது. ஐந்து மாடி சொத்தான அபெர்கான்வே ஹவுஸ், சீரம் நிறுவனத்தின் இங்கிலாந்து துணை நிறுவனமான சீரம் லைஃப் சயின்சஸால் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த விற்பனைக்கு போலந்தின் மிகப் பெரிய பணக்காரரான, மறைந்த தொழிலதிபர் ஜான் குல்சிக்கின் மகள் டொமினிகா குல்சிக் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதார் பூனவல்லா

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுக்கு அருகிலுள்ள தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையங்களில் பூனாவல்லா குடும்பம் பல மில்லியன் பவுண்டுகள் முதலீடுகளை செய்துள்ளது. 2021-ம் ஆண்டில், அதார் பூனாவல்லாவின் மனைவியும், சீரம் லைஃப் சயின்சஸ் தலைவருமான நடாஷா பூனவல்லா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக GBP 50 மில்லியன் நிதியுதவியின் ஆதரவுடன் புதிய பூனாவல்லா தடுப்பூசி ஆராய்ச்சி கட்டிடத்திற்கான திட்டங்களை அறிவித்தார்.

இங்கிலாந்தில் வலுவாக காலூன்றியுள்ளதைத் தொடர்ந்து அங்குள்ள இந்த பிரம்மாண்ட மாளிகையையும் அவர்கள் வாங்கியுள்ளனர்.

x