விபத்தில் டெலிவரி பாய் பலி... தப்பியோடிய சோமாலியா அதிபரின் மகன்... துருக்கி அரசுக்கு நெருக்கடி


துருக்கி அதிபர் எர்டோகனுடன் சோமாலியா அதிபர் முஹமூது

துருக்கியில் விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழப்பிற்கு காரணமான சோமாலியா அதிபரின் மகனை, துருக்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவதால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்றான துருக்கி, பல்வேறு முதலீடுகளை செய்து வருகிறது. பொருளாதார உதவிகள் மட்டுமின்றி, சோமாலியாவில் ராணுவ தளம் ஒன்றை நிறுவியுள்ள துருக்கி, அந்நாட்டு வீரர்களுக்கு ராணுவ பயிற்சியும் அளித்து வருகிறது. இதனால் இருநாடுகளுக்கு இடையே இணக்கமான உறவுகள் நீடித்து வந்தது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 6ம் தேதி, சோமாலியா அதிபர் ஹசன் சேக் முஹமூதின் மகன் மொகமது, துருக்கியின் ஃபதிக் மாவட்டத்தில் காரில் அதிவேகத்தில் பயணித்த போது இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில், கொரியர் டெலிவரி செய்யும் யூனுஸ் கோசர் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மொகம்து ஓட்டிச்சென்ற கார் மோதி கொரியர் ஊழியர் யூனுஸ் கோசர் உயிரிழப்பு

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வெளிநாட்டவரான மொகமது, நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையாணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே மொகமது, நாட்டை விட்டு வெளியேறி துபாய் சென்றடைந்தார். அவர் ஓட்டிச்சென்ற கார் சோமாலியா நாட்டின் தூதரகத்திற்கு சொந்தமானது ஆகும்.

இதையடுத்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் மொகமதை, துருக்கிக்கு அழைத்து வந்து வழக்கு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக்கோரி, கொரியர் டெலிவரி ஊழியர்கள் போராட்டடம் நடத்தி வருகின்றனர். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருவதால், துருக்கி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு சட்டத்துறை அமைச்சர் யில்மாஸ் டுங்க், “சர்வதேச விதிமுறைகளின்படி நடைமுறைகள் துவங்கியுள்ளது” என்று மட்டும் தெரிவித்துள்ளார். இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை சோமாலியா அதிபர் மற்றும் அவரது தரப்பினர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

x