பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஒரே வாரத்தில் 900 சீல்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ரியோ கிராண்டே மாகாணத்தில் கடற்கரையில் ஏராளமான சீல்கள் மற்றும் கடல் சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஒரு வார காலமாக அடுத்தடுத்து சீல்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவற்றின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை நடத்தினர். பிரேத பரிசோதனையில் சீல்கள், வேகமாக பரவக்கூடிய பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக கடற்கரையோர நகரங்களில் உள்ள கோழிப் பண்ணைகள், வாத்து பண்ணைகள் உள்ளிட்டவற்றில் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு உயிரிழக்கும் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிந்த பின்னரே அவற்றை அழிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே பாலூட்டி வகையைச் சேர்ந்த சீல்கள் மற்றும் கடல் சிங்கங்கள், பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருப்பதால் இது மனிதர்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதா என பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.
இருப்பினும் உயிரிழந்து கரை ஒதுங்கும் சீல்களின் உடல்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு, அவை எரியூட்டப்படுவதால் நோய் பரவலுக்கான வாய்ப்புகள் குறைவு என்றும், பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த பறவை காய்ச்சல் நோய் அதிகரித்தால், உலகின் அதிகளவு சிக்கன் ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் பிரேசில் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...