ஈரானில் ஹட்ரோகார்பன் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மேலும் பரவி வருவதோடு கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளதால், தீயணைப்புப்படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
ஈரானின் தெற்கு கொராசன் மாகாணத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம், பிர்ஜாண்ட் நகரில் இயங்கி வருகிறது. இங்கு ஹட்ரோகார்பன் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 18 சேமிப்பு தொட்டிகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த தொட்டிகளில் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், தீ அடுத்தடுத்த தொட்டிகளுக்கும் பரவியது. இதில் அடுத்தடுத்து 3 தொட்டிகள் வெடித்து சிதறியதால், அங்கிருந்த 18 தொட்டிகளுக்கும், தீ பரவியது.
தீ விபத்து நிகழ்ந்த உடனேயே அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறினர். தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் தீ மென்மேலும் பரவி, கொழுந்துவிட்டு எரியத் துவங்கியதோடு, அடுத்தடுத்த தொட்டிகளுக்கும் பரவத் துவங்கியதால் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறினர். இதனால் கட்டுக்கடங்காமல் தீ எரிந்து வருகிறது.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தீயின் தாக்கம் சற்று தணிந்ததும், அதனை அணைக்கும் பணிகள் துவங்கும் எனவும் அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த சம்பவம், சதிச்செயலாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஈரானில், ராணுவத்துடன் தொடர்புடைய இடங்களில் அடிக்கடி ட்ரோன்கள் மூலமாகவும், வெடிகுண்டுகள் மூலமாகவும் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், தீ அணைந்த பின்பே இது குறித்து விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.