சாப்பிடுவதற்காக செல்லும் உணவகத்தில் அதன் பணிப்பெண் அல்லது சிப்பந்தி, வாடிக்கையாளரை சப்பென அறைந்தால் என்னவாகும்? ஜப்பானில் ஒரு உணவகம் இதற்காக தனிக் கட்டணமே வசூலிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஜப்பானில் உள்ள சாசிஹோகோ-யா இஸகயா என்ற உணவகம், வாடிக்கையாளர்களை ஈர்க்க ஒரு வினோதமான முறையைப் பயன்படுத்தியது. ஜப்பான் கரன்சியில் 300 யென்களுக்கு கட்டணம் செலுத்தினால், உணவுகளைப் பரிமாறும் அழகான பணிப்பெண்ணிடம் ஆசைதீர அறை வாங்கலாம். கேட்பதற்கு மறைகழன்றவர்களின் யோசனையாக தென்படக்கூடும். ஆனால் இந்த ஜப்பான் உணவகம் ’அறையும்’ கூடுதல் சேவைக்காகவே பிரபலமானது.
நகோயா நகரில் அமைந்துள்ள இந்த உணவகம் அதன் மார்க்கெட்டிங் வித்தையால் பெரும் வெற்றியும் பெற்றது. ஆனால், வாடிக்கையாளர்கள் அறை வாங்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் பிரத்யேக சேவையை நிறுத்திக்கொண்டது.
வாடிக்கையாளர் கன்னத்தில் அறையும் சேவையை மார்க்கெட்டிங் உத்தியாகவே உணவகம் முதலில் ஆரம்பித்தது. தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினையோ, அலுவலக உளைச்சலோ, தீராத மன அழுத்தத்தில் வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அழகிகள் வழங்கும் அறைகள் பெரும் விடுதலை தந்திருக்கின்றனவாம்.
அறையும் சேவை ஆரம்பத்தில் இலவசமாகவே இருந்தது. குறிப்பிட்ட பணிப்பெண் கையால் அறை வாங்க விரும்புவோர் அதிகமானபோது, கட்டண விதிப்பு புகுந்தது. அதிலும், பளார் என்று அறைய வேண்டுமா, பஞ்ச் வைப்பது போல வேண்டுமா, சரவெடியாய் அடுத்தடுத்து அறை வேண்டுமா, அழகான பணிப்பெண்களில் எவரது சர்வீஸ் தேவைப்படுகிறது.. என்பதையெல்லாம் பொறுத்து கட்டண விகிதங்களை உணவம் தீர்மானித்திருந்தது.
இணைப்பில் உள்ள வீடியோவைப் பார்த்தால் தெரியும், ரகம் ரகமான அறைகள், அவற்றுக்கான கட்டண விகிதங்கள், வாடிக்கையாளர் மற்றும் பணிப்பெண்ணைப் பொறுத்தும் விழுவதை அறியலாம். சமூக ஊடகங்களில் பிரபலமானதை அடுத்து கூட்டம் நெட்டித்தள்ளவே, உணவகத்தின் உணவு சேவை பின் சென்று, ’அறையும்’ சேவை முன் நின்றது. இதனை விரும்பாத உணவகம் தற்காலிகமாக ’அறை சேவைக்கு’ பிரேக் கொடுத்திருக்கிறது. ஆனபோதும், உணவகத்துக்கான கூட்டம் குறையவில்லை.
அப்படி வருகை தரும் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அறை வேண்டும் என்ற அறைகூவல்கள் அதிகரித்தே வருகின்றன. அறை சேவையை மீண்டும் தொடங்கும்போது, ட்விட்டரில் முறைப்படி அறிவிப்போம்; அதுவரை வாடிக்கையாளர்கள் பொறுமை காக்கவும் என்ற கோரிக்கையுடன் தற்போதைக்கு தப்பித்திருக்கிறது ஜப்பான் உணவகம்.