ஆப்கனில் 'பாலின நிறவெறி' நிலவுகிறது... மறுபடியும் தாலிபன்களை தாக்கும் மலாலா


மலாலா

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் பெண்கள் நடத்தப்படும் விதத்தை, நிறவெறிக்கு இணையாக ஒப்பிட்டு மலாலா யூசுப்சாய் பேசியுள்ளது சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைக்காக இளம்வயதிலேயே போராடி, அதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் மலாலா யூசுப்சாய். பாகிஸ்தானியரான மலாலா, தனது 15 வயதில் பெண் கல்வியை மறுக்கும் பாகிஸ்தான் தலிபான்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இதற்காக பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளை தலையில் வாங்கினார். இங்கிலாந்தில் மேல் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். அந்த தாக்குதல் அவரை முழுமையான போராளியாக்கியது. 2014-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெறவும் காரணமானது.

ஜோகன்னஸ்பர்க் கூட்டத்தில் பேசும் மலாலா

தாலிபன்களுக்கு எதிராக தற்போது மலாலா பேசியிருப்பது மீண்டும் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை, கறுப்பின மக்கள் மீதான நிறவெறிக்கு இணையாக மலாலா ஒப்பிட்டுள்ளார். ஆப்கனில் நேரடியாகவும், பாகிஸ்தானில் மறைமுகமாகவும் தொடரும் தாலிபன்களின் அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தலுக்கு எதிராக இதற்கு முன்னதாகவும் பலமுறை மலாலா குரல் கொடுத்திருக்கிறார்.

இம்முறை ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 21வது நெல்சன் மண்டேலா ஆண்டு சொற்பொழிவின் போதும், சளைக்காது தாலிபன்களை வறுத்தெடுத்தார் மலாலா யூசுப்சாய். “நீங்கள் ஆப்கானிஸ்தானில் ஒரு பெண்ணாக இருந்திருப்பின், தலிபான்கள் உங்களுக்கான எதிர்காலத்தை முற்றிலும் வேறாக தீர்மானித்து இருப்பார்கள்.

மலாலா

நீங்கள் பள்ளியில் உயர்கல்வியோ அல்லது பல்கலைக்கழகத்திலோ சேர முடியாது. நீங்கள் வாசிக்க விரும்பினாலும் ஒரு நூலகத்துக்குள் பிரவேசிக்க முடியாது. உங்கள் தாய் மற்றும் உங்கள் அக்காக்கள் உங்களைவிட மோசமான அடக்குமுறைக்கு ஆளாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பீர்கள். பெண்களுக்கு எதிரான தாலிபன்களின் நடவடிக்கைகளை ’பாலின நிறவெறி’ என்று கருதப்பட வேண்டும். மேலும் சர்வதேச நாடுகள் தாலிபன்களுடனான உறவை இயல்பானதாக பாவிக்கக்கூடாது” என்றார்.

2021-ல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த அமெரிக்க படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதில், தாலிபன்கள் அங்கு மீண்டும் ஆட்சிக்கு பொறுப்பேற்றனர். அதே வேகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து பெண் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அழகு நிலையங்களை அடைத்து மூடினார்கள். உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள் மற்றும் இதர பொது இடங்களில் இருந்து பெண்களின் நடமாட்டத்துக்கு தடை போட்டார்கள். வீட்டுக்கு வெளியே குடும்ப ஆணின் உதவியின்றி பயணிப்பதற்கு தடை விதித்தார்கள். இவை அனைத்தையும் மீண்டும் சர்வதேச அளவில் மற்றுமொரு முறை, மலாலா தற்போது கவனப்படுத்தி இருக்கிறார்.

x