‘ஆண்டுக்கு 26 லட்சம் உயிர்களைக் கொல்லும் மது மீதான வரியை உயர்த்துங்கள்’ என தனது 194 உறுப்பு நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. மது மட்டுமன்றி சர்க்கரைப் பொருட்கள் மிகுந்த சோடா மென்பானங்கள் மீதான வரியையும் உயர்த்துமாறு உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘ஆண்டுக்கு 26 லட்சம் மக்கள் மது அருந்துவதால் இறக்கின்றனர்; 80 லட்சம் மக்கள் சர்க்கரை சோடா பானங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் இறக்கின்றனர். எனவே உலக மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டுக்காகவும், அவர்களின் மரணத்தை தவிர்க்கும் நோக்கிலும், ஆல்கஹால் மற்றும் சர்க்கரைப் பொருட்கள் நிறைந்த பானங்கள் மீதான வரிகளை உலக நாடுகள் அதிகரிக்க வேண்டும். வரி விதிப்பை அதிகமாக்குவதன் மூலம் இந்த இறப்புகளை குறைக்க முடியும்’ என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
கூடுதல் வரி விதிப்பானது, மது மற்றும் சர்க்கரை பானங்களின் தயாரிப்புகள் மற்றும் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமன்றி, ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்க தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும் செய்யும் என்று உலக சுகாதார நிறுவனம் நம்புகிறது.
சர்க்கரை சோடா பானங்கள் மீது வரி விதிப்பது 108 நாடுகளில் அமலில் இருந்தபோதும், அந்த சோடாவின் விலையில் வெறும் 6.6 சதவீதத்தையே அது குறிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் குறைபடுகிறது. அதே வேளையில் உலக நாடுகளின், தண்ணீருக்கு வரி விதிக்கும் நடைமுறையை உலக சுகாதார நிறுவனம் சாடுகிறது.
ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பது ஆரோக்கியமான மக்களை உருவாக்குவதாகவும், இது சமூகம் முழுவதும் நேர்மறையான தொடர் சிற்றலை விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கணக்கு போடுகிறது.
மக்கள் மத்தியிலான குறைவான மருத்துவ தேவைகள் மற்றும் நோய்கள் குறைவது, அரசுகளின் செலவினங்களை குறைக்கவும் செய்யும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக மது விற்பனை குறைவது, வன்முறை மற்றும் சாலை விபத்துகளை குறைக்கவும் உதவும் என உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.