பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் - இஸ்ரேல் அதிபரிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி!


பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர்

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நிலையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

துபாயில் சி.ஓ.பி 28 காலநிலைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள துபாய் சென்ற மோடி, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கை நேற்று சந்தித்துப் பேசினார். அவரிடம் தற்போதைய போர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மோடி, சில பணயக் கைதிகளை ஹமாஸ் சமீபத்தில் விடுவித்ததற்கு வரவேற்பு தெரிவித்தார்.

“இரு நாட்டு தலைவர்களும் தங்களின் பரந்த மற்றும் துடிப்பான இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்தனர். இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்தும் அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்” என்று இந்திய வெளியுறவுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெர்சாக் உடனான தனது சந்திப்பில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து பாதுகாப்பாக வழங்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இரு நாடுகளின் தீர்வுக்கான இந்தியாவின் ஆதரவையும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு முன்கூட்டிய மற்றும் நீடித்த தீர்வையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்று வெளியுறவுத் துறையின் அறிக்கை கூறுகிறது.

இஸ்ரேல் அதிபர் மட்டுமல்லாமல் மற்ற உலகத் தலைவர்கள் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இலங்கை அதிபர் ரணில் ஆகியோரையும் மோடி சந்தித்துப் பேசினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனான மோடியின் இருதரப்பு சந்திப்பிலும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் பற்றிய விவாதங்கள் முக்கிய இடம் பெற்றன.

தொடர்ந்து மாலையில், பிரெஞ்சு பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், மாலத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிஸ், ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன், உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் அலைன் பெர்செட் ஆகியோருடன் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுடனான பிரதமர் மோடியின் சந்திப்பில், “காலநிலை நடவடிக்கை, காலநிலை நிதி, தொழில்நுட்பம் மற்றும் ஐநா உட்பட பலதரப்பு ஆளுகை மற்றும் நிதி நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் தொடர்பான உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்" என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

x