`பிளட் மணி' கொடுக்கவும் தயார்; ஏமன் சிறையில் உள்ள மகளை விடுவிக்க தாய் பாசப்போராட்டம்


ஏமன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷா பிரியா

ஏமன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகளை நேரில் சென்று பார்க்க கோரி தாய் அளித்த கோரிக்கையை பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு நிராகரித்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா என்பவர் ஏமன் நாட்டில் நர்ஸ் வேலைக்காக சென்றிருந்தார். அவருடன் அவரது கணவர் மற்றும் குழந்தையும் ஏமனில் தங்கி இருந்து பணி செய்து வந்தனர். கடந்த 2014ம் ஆண்டு ஏமனில் உள்நாட்டு போர் வெடித்ததை தொடர்ந்து நிமிஷா பிரியாவின் கணவரும், குழந்தையும் இந்தியாவிற்கு திரும்பினர். இருந்த போதும் நிமிஷாவால் அப்போது இந்தியாவிற்கு திரும்ப முடியவில்லை.

குடும்பத்தினருடன் நிமிஷா பிரியா

இதை தொடர்ந்து 2016ம் ஆண்டு ஏமனில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் வேறு வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த நிமிஷா, ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் மஹ்தி என்பவருடன் இணைந்து கிளினிக் ஒன்றைத் துவங்கி நடத்தி வந்தார். ஆனால் சில நாட்களிலேயே மஹ்திக்கும், நிஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மஹ்தி நிமிஷாவை அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் நிமிஷாவின் பாஸ்போர்ட்டை மஹ்தி பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நிமிஷா பிரியாவின் தாய் பிரேமா மேரி

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி மஹ்தியிடம் இருந்த பாஸ்போர்ட்டை மீட்பதற்காக அவருக்கு ஊசி மூலம் போதை மருந்துகளை நிமிஷா செலுத்தியுள்ளார். ஆனால் போதை மருந்து அதிகமானதால் சுருண்டு விழுந்து மஹ்தி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிமிஷா, மஹ்தியின் உடலை மற்றொருவர் உதவியுடன் அப்புறப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் நான்கு நாட்களுக்கு பிறகு போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து நிமிஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை முடிவில் அவருக்கு மரண தண்டனையும், உடந்தையாக இருந்தவருக்கு ஆயுள் தண்டைனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏமன் நாட்டு சட்டப்படி ’பிளட் மணி’ எனப்படும் உறவினர்களுக்கு பணம் கொடுத்து நிமிஷாவை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர், ’சேவ் நிஷா பிரியா ஃபாரம்’ என்ற அமைப்பை துவக்கி நடத்தி வந்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவை நேரில் சந்திக்க ஏமன் நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்குமாறு நிமிஷாவின் தாயார் பிரேமா மேரி மத்திய அரசுக்கு விண்ணப்பம் அளித்திருந்தார். இந்நிலையில் இந்த விண்ணப்பத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக நிராகரிப்பதாக மத்திய அரசு இன்று பதில் அளித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x