பள்ளிகளில் மாணவ - மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்படும் என நியூசிலாந்தின் புதிய பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் பள்ளிகளில் மாணவ - மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்படும் என அந்நாட்டின் புதிய பிரதமர் கிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் குறைந்து வரும் கல்வியறிவு விகிதத்தை தடுக்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் நியூசிலாந்து, கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கையில் மிகவும் சிறப்பான இடத்தை பெற்றிருந்தது. ஆனால், சமீப காலமாக இங்கு கல்வியறிவு விகிதம் குறைந்து வருவதாக அந்நாட்டு ஆய்வறிஞர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் புதிதாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள கிறிஸ்டோபர் லக்சன் இதுகுறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். இதுகுறித்து பேசி இருக்கும் அவர், “எனது அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாள்களுக்குள் நியூசிலாந்து முழுவதும் பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்படும். கவன சிதறலின்றி எங்களது குழந்தைகள் கல்வியை கற்கவும், ஆசிரியர்கள் போதிக்கவும் இந்த நடவடிக்கை உதவும். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள கல்விக் கொள்கையை பரீசிலித்து நியூசிலாந்திலும் அதை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
லக்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த நவம்பர் 27ம் தேதி ஆட்சி பொறுப்பேற்றது. 2008ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பதை தடை செய்யும் புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கையை விலக்கிக்கொண்டதன் மூலம் ஆட்சிக்கு வந்த முதல் வாரத்திலேயே லக்சன் அரசு சர்ச்சையில் சிக்கிக்கொண்டது.
இந்த நிலையில், கல்வி குறித்து இந்த நடவடிக்கையை எடுத்திருக்கும் அவர், பருவநிலை கொள்கையாக முன்னாள் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன் தடைவிதித்திருந்த, கடலோர ஆயில், கியாஸ் ஆய்வுத்திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.