ரஷ்ய பெண்கள் எட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்... அதிபர் புதின் அதிரடிப் பேச்சு!


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

ரஷ்ய பெண்கள் 8 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.

விளாடிமிர் புதின்

மாஸ்கோவில் உள்ள ரஷ்ய மக்கள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 28-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பல தலைமுறைகளுக்கு குடும்பம் நீடிக்கும் வகையில் நான்கு, ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வழக்கத்தை நமது முந்தைய தலைமுறையினர் கொண்டிருந்தனர். நமது பாட்டிகள், அவர்களின் முன்னோர் ஏழு, எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டதை எல்லாம் நாம் நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும்.

வரும் ஆண்டுகளில் ரஷ்ய மக்கள் தொகையை பாதுகாக்கவும், அதனை அதிகரிக்கவும் ரஷ்யா இலக்கு கொண்டுள்ளது. இது ஆயிரம் ஆண்டு பழமையான ரஷ்யாவின் எதிர்காலத்துடன் தொடர்புடைய விஷயம்” என்றார்.

ரஷ்யா - உக்ரைன் விவகாரம்

உக்ரைன் போரில் இதுவரை எவ்வளவு பேர் கொல்லப் பட்டுள்ளனர் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், ரஷ்யர்களின் உயிரிழப்பை கருத்தில் கொண்டே புதின் இவ்வாறு பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டிஷ் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட தகவல் படி உக்ரைனுடனான போரில் 3 லட்சம் ரஷ்யர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சுதந்திரமான ரஷ்யன் கொள்கை குழு' வெளியிட்டுள்ள தகவல் படி, 8 முதல் 9 லட்சம் வரையிலான மக்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை, அதிகரிக்கும் பொருளாதார வீழ்ச்சி போன்ற நெருக்கடிகளை ரஷ்யா சந்தித்து வருகிறது. கடந்த 1999-ல் விளாடிமிர் புதின் அதிபர் பதவி ஏற்கும்போது இருந்ததை விட தற்போது அந்நாட்டில் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துள்ளதாக பிரிட்டிஷ் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

x