உலகின் ‘சோகமான யானை’க்கு நேர்ந்த சோகம்... ‘மாலி’க்கு குவியும் அஞ்சலி!


மாலி

உலகின் சோகமான யானையாக அடையாளம் காணப்பட்ட ’மாலி’, புற்றுநோய் காரணமாக பரிதாபமாக இறந்திருக்கிறது.

பிலிப்பைன்ஸ் தேசத்தின் மணிலா உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வந்த மாலி, தனது 43வது வயதில் கணையப் புற்றுநோய் காரணமாக இறந்திருக்கிறது. இணையோ, துணையோ இன்றி தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனிமையில் கழித்ததால், பீட்டா அமைப்பு மாலியை உலகின் சோகமான யானையாக அடையாளம் கண்டது.

நாட்டின் முன்னாள் முதல் பெண்மணியாக இருந்த இமெல்டா மார்கோஸுக்கு, 1981-ம் ஆண்டு 11 மாத குட்டியாக இலங்கை அரசால் பரிசாக வந்து சேர்ந்தது விஷ்வ மாலி. இடையில் சிவா என்ற ஆண் யானை துணைக்கு வந்தபோதும், அது நீடிக்கவில்லை. இடையில் சிவா மரித்துப்போனதும், மாலி சோகத்தில் ஆழ்ந்ததாக அடையாளம் காணப்பட்டாள்.

ஆனபோதும் குழந்தைகள் என்றால் மாலிக்கு கொள்ளைப் பிரியம். உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளராக குழந்தைகள் தென்பட்டால் போதும், சோக யானைக்கு எங்கிருந்தோ உற்சாக வேகம் வந்துவிடும். மற்றபடி வாழ்வின் பெரும்பங்கினை தனிமையிலும், சோகத்திலுமே மாலி கழித்து வந்தது. அந்த உயிரியல் பூங்காவிலிருந்து வேறு இடத்துக்கு மாலியை மாற்றுமாறு விலங்கு நல ஆர்வலர்கள் கோரிய போது, தனது நட்சத்திர யானையை பிரிய உயிரியல் பூங்கா நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதனால் சமூக ஊடகங்கள் வாயிலாக, சோக மாலிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் அதிகரித்திருந்தனர். சொந்த காரணங்களுக்காக ஏற்கனவே சோகத்தில் ஆழ்ந்த மக்கள், தங்களில் ஒருவராக மாலியை பாவித்தனர். மாலியின் நலம் குறித்து அவ்வப்போது விசாரித்து வந்தனர். இந்த நிலையில் செவ்வாயன்று மாலை சோக யானை தனது ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு விடைபெற்றது.

மாலி

இறந்த யானைக்கு நடத்தப்பட்ட பிரதே பரிசோதனை, விஷ்வ மாலிக்கு கணையப்புற்று நோய் இருந்ததையும், நீண்ட காலமாக அதனால் துன்புற்று வந்ததையும் உறுதி செய்துள்ளது. மாலியை முன்கூட்டியே கவனித்திருக்க வேண்டும் என்று சோக யானையின் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மாலி மறைவுக்கு உலகெங்கும் இருந்து அஞ்சலிகள் குவிந்து வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

x