அமெரிக்க தேர்தலை குறிவைத்து போலி சமூகவலைதள கணக்குகள்... சீனாவின் 4,700 கணக்குகளை அதிரடியாக நீக்கியது மெட்டா!


போலி கணக்குகள் நீக்கம்

போலியாக சமூக வலைதள கணக்குகள் துவங்கி, அமெரிக்க அரசியல் மற்றும் அமெரிக்கா - சீனா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் கருத்துகளை பரப்பி வந்த, சீனாவைச் சார்ந்த 4,700-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூவலைதளத்தில் போலி கணக்குகள்

சீனாவைச் சேர்ந்த நெட்வொர்க் ஒன்று, உலகம் முழுவதும் சேர்ந்த பல்வேறு பயனர்களின் விவரங்களை சேகரித்து, அதனை கொண்டு முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக வலைதளத்தில் 4,700-க்கும் மேற்பட்ட போலி கணக்குகளை துவங்கி, கருக்கலைப்பு, கலாசார முரண்பாடு, உக்ரைனுக்கான உதவி போன்ற தலைப்புகளில் கருத்துகளை பரப்பி வருவதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, 4,700க்கும் மேற்பட்ட போலி கணக்குகளை நீக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது, அமெரிக்க அரசியல்வாதிகள், மிச்சிகன், ஃபுளோரிடா கவர்னர்கள் உள்ளிட்டோரின் பெயர்களிலும் போலி கணக்குகள் துவங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சமூக வலைதளங்கள்

போலி கணக்குகள் துவங்கப்பட்ட விவகாரத்தில் சீனாவில் இருந்து செயல்படும் ஒரு நிறுவனத்துக்கும், ரஷ்யாவில் இருந்து செயல்படும் மற்றொரு நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் மெட்டா தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 அமெரிக்க தேர்தலை கருத்தில் கொண்டு சீனாவில் உள்ள சில சிறு நிறுவனங்கள் போலி கணக்குகளைத் துவங்கி, இத்தகைய செயல்களில் ஈடுபட தொடங்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

x