அரசியலில் குதிக்கிறாரா எலான் மஸ்க்? ஜோ பைடன் - டிரம்புக்கு எதிரான கருத்தால் புதிய எதிர்பார்ப்பு


எலான் மஸ்க்

அடுத்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்களாக ஜோ பைடன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரை ஆதரிக்கப்போவதில்லை எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். இது, நேரடி அரசியலில் எலான் மஸ்க் குதிக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் இதழ் சார்பிலான ’டீல்புக் உச்சி மாநாட்டில்’ பங்கேற்ற எலான் மஸ்க், பேட்டியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை ஆதரிப்பீர்களா என்று கேட்டபோது, அதனை எலான் மஸ்க் மறுதலித்தார். ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என அதிரடித்தார்.

எலான் மஸ்க்

ஆனால் ’இது ட்ரம்புக்கான ஆதரவு என்று பொருளில்லை’ என பின்னொரு கேள்விக்கு பதில் அளித்தார். ’பைடன் - ட்ரம்ப் என இருமுனை போட்டி அமைந்தால் யாருக்கு உங்கள் வாக்கு’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, ‘இது மிகவும் கடினமான தெரிவு’ என்று எலான் மஸ்க் தெரிவித்தார். முந்தைய தேர்தலில் ஜோ பைடனுக்கு தான் வாக்களித்ததாக எலான் மஸ்க் வெளிப்படையாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற மின்சார வாகனங்களுக்கான மாநாடு ஒன்றுக்கு டெஸ்லா நிறுவனம் அழைப்படாததில், அந்த நிறுவனத்தின் அதிபரான எலான் மஸ்க் அதிருப்தியில் இருந்தார். அதனை எதிரொலிக்கும் வகையில் இவ்வாறு கருத்து தெரிவித்தார் என்று அவரது ஆதரவாளர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு அப்பால், எலான் மஸ்க் நேரடி அரசியலில் ஈடுபடப்போகிறார் என்றும் சிலர் கிளப்பி வருகின்றனர்.

எலான் மஸ்க்

இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர், ட்விட்டர் நிறுவனத்தின் போக்கு குறித்து வெளிப்படையாக விமர்சித்து வந்தார் எலான் மஸ்க். அவரிடம் ஒரு பயனர் ‘பேசாமல் நீங்களே ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி விடுங்கள்’ என்றார். அதற்கு ’செய்து விட்டால் போயிற்று’ என்பதாக தனது பாணியில் எலான் பதிலளித்திருந்தார். ஆனால் மெய்யாலுமே ட்விட்டர் நிறுவனத்தை அவர் வளைத்துப்போட்டது பின்னர் வரலாறானது.

தற்போது இஸ்ரேல் விவகாரம் முதல் டெஸ்லாவுக்கான புறக்கணிப்பு வரை, வெள்ளை மாளிகையுடன் தீவிரமாக எலான் மஸ்க் முரண்பட்டு வருகிறார். இந்தப் போக்கு அவரது நேரடி அரசியலுக்கு அடித்தளமிட்டு வருவதாகவும் நெட்டிசன்கள் கணித்து வருகின்றனர்.

x