ஈராக்கில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஈராக்கின் கிழக்கு தியாலா மாகாணத்தில் அம்ரான்யா நகரில் உள்ளூர் எம்பி-யின் உறவினர்களை குறி வைத்து நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் அந்த வழியாக கடந்து சென்ற பயணிகள் வாகனம் இதில் சிக்கி நாசமானது. இந்த கோரத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகள் வெடித்ததும், காயமடைந்தவர்களை மீட்க அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்களை நோக்கி சதிகார கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதிலும் சிலர் உயிரிழந்துள்ளதாக ஈராக் பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய நாசக்காரர்கள் எந்த நோக்கத்திற்காக இந்தத் தாக்குதலை நடத்தினர் என்பது குறித்த தகவலை தெரிவிக்க, ஈராக் பாதுகாப்பு படையினர் மறுத்துவிட்டனர். வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை அடுத்து மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாமல் இருக்க அந்தப் பகுதியில் ஊரடங்கு பிறப்பித்துள்ளது ஈராக் அரசு.