பன்னுன் கொலை முயற்சியில் இந்திய அரசு ஊழியருக்கு தொடர்பா... வெளியுறவுத் துறை கவலை!


குர்பத்வந்த் சிங் பன்னுன்

அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நடந்த முயற்சியில் இந்திய அரசு ஊழியரை தொடர்புபடுத்துவது கவலையளிப்பதாக தெரிவித்துள்ள இந்திய அரசு, இது தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்தும் என அறிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்சி.

அமெரிக்கா, கனடா குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் சிங் பன்னுன். அமெரிக்காவில் இவரைக் கொலை செய்ய நடந்த முயற்சியில் இந்திய அரசு ஊழியரான நிகில் குப்தாவுக்கு தொடர்பு உள்ளது என்றும், நிகில் குப்தா செக் குடியரசில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தனர்.

நிகில் குப்தா கைதை தொடர்ந்து, குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நடந்த சதி முயற்சியில் இந்தியா அரசுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்சி இந்த விவகாரம் தொடர்பாக கூறுகையில், “தனிப்பட்ட நபர் தொடர்புடைய குற்றத்தில் இந்திய அரசு ஊழியரை தொடர்புபடுத்துவது கவலையளிக்கிறது. இந்த விவகாரம் அரசு கொள்கைகளுக்கு முரணாக உள்ளது. திட்டமிட்ட குற்றங்கள், சட்டவிரோத சரக்குகள் கடத்தல், ஆயுத விற்பனை, பிரிவினைவாதிகள் செயல்பாடு போன்ற பிரச்சினைகள் சர்வதேச அளவில் சட்ட அமலாக்க துறைகளுக்கு மிகப்பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

இந்தியா - அமெரிக்க உறவில் நெருடல்.

குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக இந்தியா, உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் முடிவுகள் அடிப்படையில் இந்த விவகாரம் எதிர்கொள்ளப்படும். இந்தியா - அமெரிக்க இருதரப்பு பாதுகாப்பு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை கூட்டத்துக்கு பிறகு அமெரிக்கா இந்த பிரச்சினை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துள்ளது. இந்திய உயர்மட்ட விசாரணை குழுவினர் இந்த விஷயங்கள் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்துவர்” என்றார்.

அமெரிக்காவில் வசிக்கும் குர்பத்வந்த் சிங் பன்னுன் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருபவர். இவர், பல்வேறு தீவிரவாத குற்றச்செயல்கள் காரணமாக இந்திய விசாரணை அமைப்புகளால் தேடப்பட்டு வருபவர். குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி வழக்கு விவகாரம் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் நெருடலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய அரசுக்கு தொடர்பு இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

x