இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்படுவதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஹமாஸ் வசம் உள்ள பிணைக் கைதிகளில் மேலும் சிலரை விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் 1,100-க்கும் மேற்பட்டோரை சுட்டுக்கொன்றதுடன், பெண்கள், குழந்தைகள் உள்பட 240 பேரை பிணைக் கைதிகளாக பாலஸ்தீனத்துக்கு நாடு கடத்திச்சென்றனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 14,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனர்கள் பலரும் இஸ்ரேலிய ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கத்தார் நாட்டின் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக இருதரப்புக்கு இடையில் கடந்த 24-ம் தேதி தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு புதன்கிழமை முதல் 4 நாட்களில் ஹமாஸ் 50 பிணைக் கைதிகளையும் இஸ்ரேல் 153 பாலஸ்தீனக் கைதிகளையும் விடுதலை செய்திருந்தன.
இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாக இஸ்ரேல் தரப்பு நேற்று தெரிவித்திருந்தது. இதை ஹமாஸ் தரப்பும் உறுதி செய்துள்ளது. இதையடுத்து 7-வது நாளாக போர் நிறுத்தம் அமலில் உள்ளது நிலையில் இஸ்ரேல் நாட்டின் பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது. இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 30 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு இன்று அதிகாலை விடுதலை செய்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நவம்பர் 24-ம் தேதியில் இருந்து தற்போது வரை 97 இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இஸ்ரேல் சிறையில் இருந்து 180 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ஹமாஸ் வசம் உள்ள பிணைக் கைதிகளில் மேலும் சிலர் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...