பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே 5 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அவரை மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.
பூட்டானில் கடந்த ஜனவரியில் பிரதமராக ஷெரிங் டோப்கே பொறுப்பேற்றார். பதவியேற்ற பின்னர் அவர் முதல் வெளிநாட்டு பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். தனது இந்திய பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரை ஷெரிங் டோப்கே சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பூட்டான் பிரதமருடன் அந்நாட்டு வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர், எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர், தொழில்துறை, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர், பூட்டான் அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் இந்தியா வந்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “இந்தியாவும் பூடானும் அனைத்து மட்டங்களிலும் நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் நட்பு, ஒத்துழைப்பின் முன்மாதிரியான உறவுகளைக் கொண்டுள்ளன.
பூட்டான் பிரதமரின் இந்தப் பயணம் இரு தரப்பினருக்கும் தனித்துவமான கூட்டாண்மையின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வதற்கும், நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் நீடித்த உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. பூடானில் கடந்த ஜனவரியில் ஷெரிங் டோப்கே தலைமையில் புதிய அரசு அமைந்ததும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் மோகன் க்வாத்ரா 3 நாள் பயணமாக அந்நாட்டிற்கு சென்றார்.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய நாடாக சீனாவும், பூட்டானும் அமைந்துள்ளன. இந்நாடுகள் தங்கள் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண விவாதித்து வரும் நிலையில் பூட்டான் பிரதமர் இந்தியா வந்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு நலன்களில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பூட்டான், சீனா இடையிலான பேச்சுவார்த்தைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன்... அலர்ட்டான ரஜினிகாந்த்!