குழந்தை பிறப்பை அதிகரிக்க தென்கொரியாவில் அரசு நடத்திய டேட்டிங் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
உலக அளவில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இரண்டாம் இடத்தில் தென்கொரியா உள்ளது. அதேபோல், திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் 35 சதவீதம் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 50 ஆண்டுகளில் 27 சதவீதம் மக்கள் தொகை குறையும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் திருமணத்தை ஊக்குவிக்கவும், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் தென்கொரிய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சியாங்னம் மாநகராட்சி சார்பில் டேட்டிங் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் 100 தென்கொரிய பெண்கள் மற்றும் ஆண்கள் என 20 முதல் 30 வயதுக்குட்பட்ட `சிங்கிள்ஸ்' பங்கேற்றனர்.
அழகான ஆடைகளை அணிந்து கொண்டு அதில் நேம் டேகையும் தொங்கவிட்டு இருந்தார்கள். இவர்களை மகிழ்விக்க அங்கு பல்வேறு விளையாட்டுக்களும், இலவச ஒப்பனை சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும், ரெட் ஒயின் மற்றும் சாக்லேட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சி மூலம் ஒருவருக்கொருவர் பழகி அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டேட்டிங் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்கள் தங்களுக்கான இணையை கண்டுபிடிப்பார்கள். அதோடு தேர்ந்தெடுத்த இணையோடு வரும்காலத்தில் குழந்தையைப் பெறுவார்கள் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 5 முறை இந்த டேட்டிங் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் 460 பேர் கலந்துகொண்ட நிலையில், 198 பேர் தங்களுக்கு விருப்பமான நபருடன் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டதோடு, ஜோடிகளாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அரசின் இந்த முயற்சிக்கு கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளது. மக்கள் கட்டும் வரிப்பணம் இம்மாதிரியான நிகழ்ச்சிகளால் வீணடிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பலர் திருமணமும், குழந்தையும் வேண்டாம் என்று சொல்ல வீடு கட்டவும், குழந்தைகளின் படிப்புக்கும் ஆகும் செலவே காரணமென்றும் கூறுகின்றனர். இந்த விமர்சனங்களால் தலைநகர் சியோலில் நடைபெற இருந்த டேட்டிங் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.