அமெரிக்காவில் மாதக்கணக்கில் விடுமுறையின்றி வாரத்தின் 7 நாட்களும் வேலை செய்யுமாறு கடை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதால் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலையை உதறிவிட்டு வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மினரல் பாயிண்ட் ஸ்டோர் என்ற பல்பொருள் அங்காடி செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த சில மாதங்களாகவே ஊழியர்களுக்கு விடுமுறை இன்றி வாரத்தின் 7 நாட்களும் பணி செய்யுமாறு நிர்வாகம் கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்நிறுவனத்தின் கொள்கையின்படி காலாவதியாகும் உணவுப் பொருட்களை மற்றவர்களுக்கு தானம் செய்யக்கூடாது என கடுமையாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இதனால் தானம் செய்யக்கூடிய உணவுகளையும் குப்பையில் கொட்டுமாறு ஊழியர்களை அந்நிறுவனம் வற்புறுத்தி வந்துள்ளது.
வாரத்தின் ஏழு நாட்களும் பணி செய்தாலும், போதிய ஊதிய உயர்வு இன்றி மேலும் மேலும் உழைப்பு சுரண்டலில் அந்த நிறுவனம் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், நிர்வாகத்தின் போக்கை கண்டிக்கும் வகையில் பணியில் இருந்த ஆறு பேரும் ஒரே நேரத்தில் நிறுவனத்தில் இருந்து வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் வெளியேறுவதற்கு முன்பாக தங்களின் கோரிக்கைகள் அடங்கிய போஸ்டர்களை கடையின் முகப்பில் கண்ணாடிகளில் ஒட்டி உள்ளனர். ஒரு போஸ்டரில், ’வாடிக்கையாளர்களுக்கு நன்றி. நாங்கள் வெளியேறுகிறோம். உங்களின் அன்பை நாங்கள் நிச்சயம் மிஸ் செய்வோம்’ என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் மற்றொரு போஸ்டரில், ’கடை மூடப்பட்டுள்ளது. கடையில் இருந்த அனைத்து ஊழியர்களும் போதுமான ஊதியம் இல்லாததாலும் விடுமுறையின்றி அதிகப்படியான வேலை காரணமாக வெளியேறி இருக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் அடங்கிய தகவல்கள் வெளியாகி இணையத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பி உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு, வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளோடு சில நாடுகள் அதை நடைமுறைப்படுத்தவும் செய்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனம் வாரத்தின் ஏழு நாட்களும் பணியாற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மாங்கல்ய வரம் தரும் ‘காரடையான் நோன்பு... வழிபடும் முறை... சொல்ல வேண்டிய ஸ்லோகம்!
இந்த 23 வகை நாய்களை இனி வீட்டில் வளர்க்கக்கூடாது... மத்திய அரசு அதிரடி உத்தரவு!