கனடா எல்லையில் இருந்து அமெரிக்காவின் அப்ஸ்டேட் நியூயார்க்கில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற மூன்று இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க், பஃபல்லோ நகரில் உள்ள சர்வதேச ரயில் பாதை பாலத்தில் ஓடும் சரக்கு ரயிலில் இருந்து குதித்த ஒரு பெண் உள்பட 4 பேரை அமெரிக்க எல்லை ரோந்து போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்தப் பகுதியானது கனடா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. முன்னதாக ரயிலில் இருந்து கீழே குதித்ததால் அந்தப் பெண்ணால் நகர இயலவில்லை. போலீஸாரை கண்டதும் மற்ற 3 ஆண்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் அவர்கள் மூவரும் விரட்டிப் பிடிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர்களை பஃபல்லோ ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில், காயமடைந்த பெண் மற்றும் 2 ஆண்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், மூன்றாவது ஆண் டொமினிகன் குடியரசைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
காயமடைந்த அந்த பெண் முதலுதவிக்குப் பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற மூவரும் படாவியா கூட்டாட்சி தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டனர். சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் தேசிய சட்டம் பிரிவுகள் 212 மற்றும் 237-ன் இவர்கள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு 4 பேரும் நாடுகடத்தப்படுவார்கள் என எல்லை ரோந்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மாங்கல்ய வரம் தரும் ‘காரடையான் நோன்பு... வழிபடும் முறை... சொல்ல வேண்டிய ஸ்லோகம்!