நாடு இருக்கும் நிலைமையில் எனக்கு சம்பளமே வேண்டாம்... பாகிஸ்தான் அதிபர் அதிரடி!


பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி

பாகிஸ்தான் நாட்டின் 14ஆவது அதிபராக ஆசிப் அலி சர்தாரியும் நாட்டின் சவாலான இந்த நேரத்தில் தனது சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. நிர்வாக திட்டமின்மையே தற்போதைய நிலைக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில் அண்மையில் பதவியேற்ற அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, நாட்டின் சவாலான இந்த நேரத்தில் தனது சம்பளத்தை வாங்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தார்.

மேலும் நாட்டு மக்களுக்கு எல்லா வகையிலும் சேவை செய்ய இருப்பதாக அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் 14ஆவது அதிபராக ஆசிப் அலி சர்தாரியும் தனது சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி

நாட்டின் சிக்கலான பொருளாதார சூழ்நிலை மற்றும் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசிய கருவூலத்துக்கு சுமையை ஏற்படுத்தாமல் இருப்பது அத்தியாவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப காலகட்டத்தில் தொழிலதிபராக இருந்து அரசியலுக்கு வந்த ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான் அதிபராக கடந்த 10ம் தேதி பதவியேற்றார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரான சர்தாரி, ஏற்கனவே 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துள்ளார். எனினும், அந்த நாட்டில் ராணுவத்தை சேர்ந்தவராக இல்லாமல், ஜனநாயக முறைப்படி இரண்டாவது முறை அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்றுள்ளார். இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவருமாவார்.

இதையும் வாசிக்கலாமே...

x