வெற்றி பெற்ற பிரதமர் மோடியின் கோரிக்கை... பிரிக்ஸ் அமைப்பில் புதிதாக 6 நாடுகள்!


பிரிக்ஸ் அமைப்பு

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று பிரிக்ஸ் அமைப்பில் மேலும் 6 நாடுகளை இணைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அர்ஜெண்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் முழுநேர உறுப்பினர்களாக இணையவுள்ளன.

வளரும் நாடுகளின் அமைப்பான ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உள்ளன. ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாடு தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் பிரிக்ஸ் நாடுகளிடையே வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் போன்றவற்றில் ஒத்துழைப்பு மற்றும் புவி வெப்பமயமாதல், உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

மாநாட்டில் நேற்று பேசிய பிரதமர் மோடி, ‘‘ பிரிக்ஸ் அமைப்பில் தற்போது இந்தியா, ரஷ்யா, பிரேசில் உட்பட 5 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் மேலும் சில நாடுகள் இணைந்து பெரிய அளவிலான அமைப்பாக மாறவேண்டும். பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பு நாடுகளை அதிகரிப்பதற்கு இந்தியா தனது முழு ஆதரவை இங்கு தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரத்தில் தற்போது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கருத்தொற்றுமையுடன் இந்த விரிவாக்கம் நடைபெறவேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் கோரிக்கையை பிரிக்ஸ் கூட்டமைப்பு ஆலோசித்து ஒருமனதாக ஏற்றுக் கொண்டது. அதன்படி, பிரிக்ஸில் புதிதாக 6 நாடுகள் இணைய இருக்கின்றன. இதை மாநாட்டின் நிறைவுநாளான இன்று தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பிரிக்ஸ் அமைப்பில் மேலும் 6 நாடுகளை இணைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அர்ஜெண்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை பிரிக்ஸ் அமைப்பின் முழுநேர உறுப்பினர்களாக சேர்க்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும். அடுத்த ஆண்டு இந்த 6 நாடுகளும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும்" என்று தெரிவித்துள்ளார்.

‘பிரிக்ஸ்’ அமைப்பில் புதிதாக 6 நாடுகள் இணைய இருப்பது பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

x