உலகளவில் கவனம் பெற்ற புகைப்பிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நியூசிலாந்து தேசம் கைவிட முன்வந்துள்ளது.
புகைப்பிடிக்காத தலைமுறையை உருவாக்கும் கனவுடன் கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட இந்த சட்டம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நியூசிலாந்தின் பிரதமராக கிறிஸ்டோபர் லக்சன் பதவியேற்ற சூட்டில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். பழமைவாத தேசியக் கட்சி சார்பில் இவர் வெற்றி பெற்றதன் மூலம், ஜசிந்தா ஆர்டெர்னின் ஆறாண்டு தொழிலாளர் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
தலைநகர் வெலிங்டனில் நடைபெற்ற விழா ஒன்றில் 53 வயதாகும் கிறிஸ்டோபர் லக்சன், புதிய கூட்டணி அரசின் தலைவராக பதவியேற்றார். அதே வேகத்தில் அவர் வெளியிட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான அறிவிப்புகளின் அங்கமாக, புகைப்பிடித்தல் தடைக்கான சட்டம் திரும்பப் பெறப்படும் என்பதும் அறிவிப்பாகி உள்ளது. 2008-ம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த எவருக்கும், புகையிலை பொருட்கள் விற்பனையை தடைசெய்யும் ’தலைமுறைப் புகைபிடித்தல் தடைச் சட்டம்’ இதன் மூலம் கைவிடப்படுகிறது.
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையின் வரி வருவாய் அரசாங்கத்துக்கு வரவேற்கத்தக்க வருவாயை உருவாக்கும் என்று புதிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மாறாக புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கும் சட்டம், கறுப்புச் சந்தையை உருவாக்கும் ஆபத்து குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் குறிப்பிடத்தக்க செல்வந்தர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் லக்சன், குடி மற்றும் புகைப்பழக்கம் அறவே இல்லாதவர். அப்படிப்பட்டவர் புகைத்தலுக்கு எதிரான தடையை திரும்பப் பெற்றிருப்பதை, நியூசிலாந்து தேசத்தின் பெரும் பின்னடைவு என, புகைப்பழக்கத்திற்கு எதிரான அமைப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
”சட்டத்தை கைவிடுவது, புகையிலை சார்ந்த வணிகம் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் வரிகளைப் பொறுத்தளவில் பெரும் வெற்றியாக இருக்கலாம். ஆனால், தேசத்தின் பொது சுகாதாரத்திற்கு இது மிகப்பெரும் இழப்பு’’ என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.