`அரசியல் போராட்டம் தொடரும்'- மாவீரர் நாளில் பிரபாகரனின் மகள் துவாரகா திடீர் உரை


துவாரகா பிரபாகரன் மாவீரர் நாள் உரை

ஈழத்திற்கான அரசியல் போராட்டம் தொடரும் என மறைந்த விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் மகள் துவாரகா மாவீரர் நாள் உரையில் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின் போது விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆகியோர் போர்க்களத்தில் உயிரிழந்தனர். அவரது இரண்டாவது மகன் பாலசந்திரன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட புகைப்படங்களும் வெளியானது. இருப்பினும், பிரபாகரனின் மனைவி மதிவதினி, மகள் துவாரகா ஆகியோர் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

துவாரகா, மதிவதினி, பாலசந்திரனுடன் பிரபாகரன்

அவர்கள் இருவரும் இறுதிப்போருக்கு முன்னதாகவே வெளிநாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என ஈழ ஆதரவாளர்கள் தெரிவித்து வந்த நிலையில், இலங்கை அரசால் உறுதியான தகவலை வெளியிட முடியவில்லை. அண்மையில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் பொதுவெளியில் தோன்றுவார்கள் எனவும் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவீரர் நாளான நவம்பர் 27ம் தேதி துவாரகா பிரபாகரன் திரையில் தோன்றி மாவீரர் நாள் உரை நிகழ்த்துவார் என அறிவித்திருந்தது.

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்

இதனை தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குநருமான கெளதமனும் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் இன்று இணையதளம் வாயிலாக துவாரகா திரையில் தோன்றி மாவீரர் நாள் உரை நிகழ்த்தினார்.

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த செய்தியை அந்த இணையதளங்கள் ஒளிபரப்பிய நிலையில், துவாரகா தனது பேச்சின் போது, ஈழத்திற்கான அரசியல் போராட்டம் தொடரும் எனவும் இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உறுதுணையாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

துவாரகா

ஆனால் இது துவாரகா அல்ல எனவும், செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ எனவும் சில அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 25 முதல் 27 வரை 3 நாட்கள் மவுன விரதம் இருந்து, நவம்பர் 27ம் தேதியன்று மாவீரர் நாள் உரை நிகழ்த்துவது வழக்கம். 2009ல் நிகழ்ந்த இறுதிப்போருக்கு பிறகு அவரது மாவீரர் நாள் உரை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x