இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிபர் ரணில் விக்கிரமசிங்க இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் தலையீடு இருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த தோல்விக்கு இலங்கை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க தான் காணரம் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ரோஷன் ரணசிங்க, தற்போதைய சூழலில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும், அதிபரும், ரத்நாயக்கவுமே பொறுப்பு. நாமல் ராஜபக்ச, அதிபர் ரணில் விக்ரமசிங்க தொடர்பாக என்னை எச்சரித்தார். ரணில் ஒரு பாம்பு. நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில், அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர், விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் மாளிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.